விமானச் சரக்கைக் கையாளுபவர்கள் இப்போது நேரடி செயல்பாடுகளில் இறங்குவதற்கு முன்பு, அபாயமற்ற சூழலில் மெய்நிகர் யதார்த்தம், உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்சி பெறலாம்.
தரைவழி கையாளுநரான ‘சேட்ஸ்’, பாதுகாப்பு, செயல்பாட்டுத் தயார்நிலை, பணியாளர்களின் திறனை வலுப்படுத்தும் நோக்கில், வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) ஒரு புதிய பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்தது.
‘சேட்ஸ்’ விமானச் சரக்கு முனையத்தில் அமைந்துள்ள ‘சேட்ஸ்’ இமெர்சிவ் சென்டரில், ஒரு பொருள் நகர்த்தும் ஊழியர், கூட்டுத் தட்டு கொள்கலன் ஏற்றியும், ஒரு ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கி, ஒரு டிராக்டர் வாகனம் ஆகியவற்றை உருவகப்படுத்தும் நான்கு அமைப்புகள் உள்ளன.
சரக்குக் கொண்டுசெல்லும் இயந்திரமும், கூட்டுத் தட்டு கொள்கலன் ஏற்றியும் மெய்நிகர் தொழில்நுட்ப அமைப்புகளாக மட்டுமே இருக்கும் நிலையில், ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கி, டிராக்டர் வாகனப் பாவனை சாதனம் உண்மையான உபகரணங்களைப் போலவே செயல்படும் வன்பொருளைக் கொண்டுள்ளன.
இந்த அமைப்புகள் பல்வேறு வானிலை சூழல்களையும் பணியிட அபாயங்களையும் உள்ளடக்கியுள்ளன.
உதாரணமாக, ஃபோர்க்லிஃப்ட் பாவனை சாதனத்தில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது, கீழே விழும் சரக்குத் தட்டுகள் அல்லது தரையில் உள்ள எண்ணெய்க் கசிவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடலாம். இது அவர்களை நிகழ்நேரத்தில் எதிர்வினையாற்றத் தூண்டும்.
புதிய ஊழியர்கள் தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பாவனை சாதனங்களைப் பயன்படுத்துவார்கள். அதே சமயம் மூத்த ஊழியர்கள் தங்கள் புத்துணர்வுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இதே அமர்வுகளில் பங்கேற்பார்கள்.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் இந்த நிலையத்தைத் தொடங்கி வைத்தார். சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஆதரவுடன், சேட்ஸ் நிறுவனம், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து இந்த நிலையத்தை உருவாக்கியுள்ளது.
விமானப் போக்குவரத்து தொடர்பான படிப்புகளை மேற்கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த நிலையம் திறந்து வைக்கப்படும்.
சாங்கி விமான நிலையம் 2025ஆம் ஆண்டில் 2.08 மில்லியன் டன் அளவிலான வான்வழி சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 4.5 விழுக்காடு அதிகம். இது விமான நிலையத்தின் மிகச்சிறந்த சரக்குக் கையாளுதல் செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்ததோடு, 2.01 மில்லியன் டன்னைக் கையாண்ட 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகச்சிறந்த செயல்பாடாகவும் விளங்குகிறது.
