அறிவுசார் குறைபாடுள்ளோர்க்குத் ஆதரவு வழங்க முன்களப் பணியாளர்களுக்குப் பயிற்சி

அறிவுசார் குறைபாடுள்ளோர்க்குத் ஆதரவு வழங்க முன்களப் பணியாளர்களுக்குப் பயிற்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Oct 2026 - 6:41 pm

2 mins read

2027ஆம் ஆண்டு முதல் பலதுறை மருந்தகங்களில் பணிபுரியும் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம் எனப்படும் மதியிறுக்க பாதிப்பு உள்ளவர்களுக்குத் திறம்பட ஆதரவு வழங்க பயிற்சி அளிக்கப்படும்.

உடற்குறையுள்ளோருக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காகச் சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) அறிவித்த புதிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

நடத்தை சார்ந்த அல்லது பதற்றம் தொடர்பான குறைபாடுகளைக் கொண்ட நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கான முன்னுரிமை வரிசை போன்ற நடைமுறை வசதிகளும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

கூடுதல் ஆதரவு தேவைப்படும் நபர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குவதற்காக 2028ஆம் ஆண்டிற்குள் மூன்று பொது சுகாதாரக் குழுமத்திலிருந்து (தேசிய பல்கலைக்கழகச் சுகாதார அமைப்பு, என்எச்ஜி ஹெல்த், சிங்கப்பூர் சுகாதாரச் சேவைகள்) தலா ஒரு பலதுறை மருந்தகத்தைச் சுகாதார அமைச்சு அடையாளம் காணும்.

அந்தக் குறிப்பிட்ட பலதுறை மருந்தகங்கள் நோயாளிகள், பராமரிப்பாளர்களுடன் இணைந்து வருகைக்கு முந்தைய ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளும்.

தேவையெனில், நீண்ட மருத்துவ ஆலோசனைகளை வழங்குவது, பராமரிப்பாளர்களுடன் தொடர்பில் இருப்பது, முன்பதிவுகள், நோயாளிகளுக்கானத் தொடர் பராமரிப்புகளை நிர்வகிக்க உதவுவது போன்ற சேவைகளை அவை வழங்கும்.

என்எச்ஜி அங் மோ கியோ பலதுறை மருந்தகத்தில் ஈராண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து குறிப்பிட்ட பலதுறை மருந்தகங்களில் அந்தச் சேவையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ஸ்பார்க் கிளினிக்’ என அழைக்கப்படும் அத்திட்டமானது, 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய உடற்குறையுள்ளோருக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் ஒரு சிறந்த மருந்தகத்தை நடத்தி வருகிறது.

2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் என்எச்ஜி காத்திப் பலதுறை மருந்தகத்திற்கும் அத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

சுகாதாரத் தொடர்பு கடப்பிதழ்

எஸ்ஜி எனேபில் அமைப்புடன் சுகாதார அமைச்சு இணைந்து, 2027ஆம் ஆண்டு முதல் தேர்வு செய்யப்பட்ட பலதுறை மருந்தகங்களில் அறிவுசார் குறைபாடு, மதியிறுக்க பாதிப்பு உள்ளவர்களுக்காகச் சுகாதாரத் தொடர்புக்கான கடப்பிதழ் ஒன்றை நடைமுறைப்படுத்தும்.

நோயாளிகளின் தகவல் தொடர்பு குறித்த விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு போன்ற முக்கியத் தகவல்களைப் பதிவுசெய்ய அந்தக் கடப்பிதழ் பயன்படுத்தப்படும்.

எதிர்காலத் திட்டமிடலுக்கு உதவி

2027ஆம் ஆண்டு முதல் உடற்குறையுள்ளோரும் அவர்களின் குடும்பத்தினரும் மேம்பட்ட பராமரிப்புக்காகத் திட்டமிடுபவர்களுடன் இணைந்து தங்களது குறுகியகால, நீண்டகால இலக்குகள், விருப்பங்கள், தேவைகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும்.

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் எஸ்ஜி எனேபில் அமைப்பும் இணைந்து பகல்நேர சேவை நிலையங்கள், எனேபிலிங் சேவை நடுவங்கள் போன்ற உடற்குறையுள்ளோருக்கான சேவைகளை உள்ளடக்கி, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர்களின் பராமரிப்பைத் திட்டமிடக் குடும்பங்களுக்கு உதவும்.

குறிப்புச் சொற்கள்
பலதுறை மருந்தகம்சுகாதார அமைச்சுஆட்டிசம்பயிற்சி