தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிர்காப்புத் திறன் பயிற்சி பெற்ற வெளிநாட்டு ஊழியர்கள்

3 mins read
8bc2a2c4-2c46-43f3-b2a4-bbe3a702fba7
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தங்குவிடுதியில் இந்திய நாட்டவரான  43 வயது திரு சாமிநாதன் ரகுநாத் இதயச் செயலிழப்பு காரணமாக மாண்டார். சிபிஆர் சிகிச்சை தெரியாததால் அவரை அவர்களது நண்பர்களான 38 வயது திரு மோகன் சதீஷ்குமார் (இடது), 32 வயது திரு கருணாநிதி பிரபாகரன் (வலது), 43 வயது திரு கணபதி கலியமூர்த்தி (படுத்திருப்பவர்) ஆகியோரால் காப்பாற்ற முடியாமல் போனது. தமது நண்பரின் மரணத்தை அடுத்து, இந்த மூவரும் சிபிஆர் சிகிச்சைமுறையைக் கற்றுக்கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பங்ளாதேஷிய ஊழியரான 29 வயது இஸ்லாம் முகம்மது ஷரிஃபுல், சிபிஆர் எனப்படும் இதய இயக்க மீட்பு சிகிச்சை முறையைக் கற்றுக்கொண்டபோது அத்திறன் அவருக்குக் கூடிய விரைவில் பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கழித்து, சிபிஆர் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி சக ஊழியர் ஒருவரின் உயிரை அவர் காப்பாற்றினார்.

வெஸ்ட்லைட் துவாஸ் அவென்யூ 2ல் நிலையப் பராமரிப்புத் தொழில்நுட்பராகவும் துப்புரவாளராகவும் திரு ஷரிஃபுல் பணிபுரிகிறார்.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று 35 வயது திரு சந்தநாத கங்கா ராஜு என்பவருக்கு இதயச் செயலிழப்பு ஏற்பட்டது குறித்து திரு ஷரிஃபுலுக்குத் தெரியவந்தது.

திரு சந்தநாத கங்கா ராஜுவின் அறைக்கு விரைந்த திரு ஷரிஃபுல், அங்கு அவர் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டார்.

அவரது வாயில் நுரை தள்ளியது.

சிறிதும் தயங்காமல், தாமதிக்காமல் திரு சந்தநாத கங்கா ராஜுவுக்குத் திரு ஷரிஃபுல் சிபிஆர் சிகிச்சை அளித்தார்.

அதையடுத்து, திரு சந்தநாத கங்கா ராஜுவுக்குச் சுயநினைவு திரும்பியது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நடத்திய சமூக அவசரகாலத் தயார்நிலைத் திட்டத்தில் சிபிஆர் சிகிச்சைமுறையைக் கற்றுக்கொண்ட பிறகு, திரு சந்தநாத கங்கா ராஜுவின் உயிரைக் காப்பாற்ற திரு ஷரிஃபுல் அத்திறனை முதல்முறையாகப் பயன்படுத்தினார்.

“எனக்குத் சிபிஆர் சிகிச்சை முறை தெரிந்திருந்ததால் எனது கவனம் சிதறவில்லை. என்னால் முடிந்ததைச் செய்தேன்,” என்று அக்டோபர் 29ஆம் தேதியன்று திரு ஷரிஃபுல் தெரிவித்தார்.

திரு ஷரிஃபுலுக்கு அவரது நிறுவனம் விருது வழங்கியது.

சக ஊழியர் அல்லது நண்பருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டபோது செய்வதறியாது தவித்த நண்பர்கள் கண் முன்னே உயிர் பிரிந்த சோகச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தங்குவிடுதியில் தமது கைப்பேசியில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த இந்திய நாட்டவரான 43 வயது திரு சாமிநாதன் ரகுநாத்துக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது.

அவருடன் அப்போது இருந்த அவரது மூன்று நண்பர்களான 38 வயது திரு மோகன் சதீஷ்குமார், 32 வயது திரு கருணாநிதி பிரபாகரன், 43 வயது திரு கணபதி கலியமூர்த்தி ஆகியோருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கும் முறை தெரியாது.

திரு ரகுநாத்தின் உயிர் பிரிந்தது.

அவருக்கு திருமணமாகி 12 மற்றும் 17 வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திரு ரகுநாத்தின் மூன்று நண்பர்களும் சிபிஆர் சிகிச்சைமுறையைக் கற்றுக்கொண்டனர்.

இதயத்தைத் துடிக்கவைக்க உதவும் தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்தவும் சிபிஆர் சிகிச்சைமுறை அளிக்கவும் அண்மை ஆண்டுகளாகக் கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி மூலம் சக ஊழியர்களை மட்டுமின்றி அவசரகாலத்தின்போது பொதுமக்களின் உயிரையும் இந்த வெளிநாட்டு ஊழியர்களால் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் சிலர், மனிதவள அமைச்சின் உறுதி, பராமரிப்பு, ஈடுபாடு குழுவின் முதலுதவித் திட்டத்தின்கீழ் இந்த உயிர்காக்கும் திறன்களைக் கற்றுக்கொள்கின்றனர்.

இத்திட்டத்தின்கீழ் இக்குழு சிங்கப்பூர் இதய அறநிறுவனம், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்கள், தங்குவிடுதி நடத்துநர்கள், முன்கள அதிகாரிகள் ஆகியோருக்குப் பயிற்சி அளிக்கிறது.

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டதுமுதல் இதுவரை 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களும் தங்குவிடுதி நடத்துநர்களும் பயிற்சி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்