தொழில்நுட்ப வளர்ச்சியால் வேகமாக மாற்றமடைந்து வரும் போக்குவரத்துத் துறையில், டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் பேருந்து ஓட்டுநர்களாகத் தங்கள் வாழ்க்கைத்தொழிலை மாற்றிக்கொள்வதற்கு உதவும் புதிய பயிற்சித் திட்டம் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் வழங்கப்படும் இந்தப் பயிற்சித் திட்டம், இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். இதில் வேலையிடப் பயிற்சியுடன், மின்சார வாகனப் பரிசோதனை முறை மற்றும் பேருந்து நிலையப் பராமரிப்பு நடவடிக்கைகள் போன்ற பணி தொடர்பான கூடுதல் திறன்களும் கற்றுத்தரப்படும்.
பயிற்சி பெறுவோர் தங்கள் பணி, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது பராமரிப்புப் பொறுப்புகளுக்கிடையே நீக்குப்போக்குத் தன்மையுடன் இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.
திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 28) உலு பண்டான் பேருந்துப் பணிமனையிலுள்ள சிங்கப்பூர் பேருந்துக் கழகத்துக்கு வருகை தந்த போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங், செய்தியாளர்களிடம் உரையாற்றினார். தொழில்நுட்பம் பயணிகளுக்குப் போக்குவரத்தை மேலும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றியிருந்தாலும், அது வேலைவாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“அதனால்தான் முன்கூட்டியே ஆயத்தமாகி வருகிறோம். தொழில்துறையை உருமாற்றும் வேளையில், நமது ஊழியர்களுக்கும் அதே நேரத்தில் உதவ விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
பாயிண்ட்-டு-பாயிண்ட் ஓட்டுநர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று வினவப்பட்டபோது, தங்களின் வேலைகளைத் தானியங்கி வாகனங்கள் பாதிக்குமோ என்ற கவலை பல ஊழியர்களுக்கு இருப்பதாகத் திருவாட்டி சுன் தெரிவித்தார்.
இந்த வாழ்க்கைத்தொழில் மாற்றுத் திட்டம் பல வாய்ப்புகளில் ஒன்றாகும். தானியங்கி வாகன நிபுணர்களாக மாற விரும்புகிறவர்களுக்கான திட்டமும் இதில் அடங்கும். கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், தொழில்நுட்ப முன்னேற்றங்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், புதிய வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஓட்டுநர்களுக்கு உதவும் ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
போக்குவரத்து அமைச்சு, திறன் மற்றும் ஊழியரணி மேம்பாட்டுக் கழகம், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) ஆகியவை திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 28) வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்த வாழ்க்கைத்தொழில் மாற்றுத் திட்டம் இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் எனக் குறிப்பிட்டன. கனரக வாகனங்களை இயக்குவதற்கான ‘கிளாஸ் 4’ உரிமம் வைத்திருக்கும் ஓட்டுநர்கள் குறைந்த கால அளவிலான பயிற்சியைப் பெற அனுமதிக்கப்படுவர்.
வாழ்க்கைத்தொழில் மாற்றம் செய்ய விரும்புவோர், ‘கோ-அஹெட் சிங்கப்பூர்’, ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’, ‘எஸ்எம்ஆர்டி பஸ்சஸ்’, ‘டவர் டிரான்சிட் சிங்கப்பூர்’ ஆகிய நான்கு பொதுப் பேருந்து நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
உள்ளூர் பேருந்து ஓட்டுநர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் மேற்கொள்ளப்படும் தற்போதைய முயற்சிகளுக்கு இந்தப் பயிற்சித் திட்டம் ஊக்கமளிப்பதாகக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைத்தொழிலை மாற்றிக்கொள்ளும் ஓட்டுநர்கள், புதிய உள்ளூர் பேருந்து ஓட்டுநர்களுக்கு 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் உயர்த்தப்பட்ட தொடக்கச் சம்பளம் மற்றும் கூடுதல் வரவேற்பு ஊக்கத்தொகைக்குத் தகுதி பெறுவர்.
அந்நாளில் இருந்து, புதிய சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளான பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் மாதம் $450 சம்பள உயர்வையும் கூடுதல் $2,000 வரவேற்பு ஊக்கத்தொகையையும் வழங்கும். இதன்மூலம், கூடுதல் பணி நேர ஊதியம் மற்றும் படித்தொகை உட்பட, புதிய பொதுப் பேருந்து ஓட்டுநர்களின் சராசரி மாதாந்திரச் சம்பளம் தற்போதுள்ள $3,600லிருந்து $4,000க்கும் அதிகமாக உயரும். தற்போதைய பேருந்து ஓட்டுநர்களுக்கு அதற்குப் பதிலாக ஒரே முறை வழங்கப்படும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
