இளையர்கள் குண்டர் கும்பல்களில் சம்பந்தப்படுவதைத் தடுக்க சிங்கப்பூர் காவல்துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் சமூகத்துடன் பணியாற்றுவோருக்கும் தனிப்பட்ட பயிற்சிகளை வழங்கவுள்ளது.
அதன்படி மாணவர்களின் தவறான பழக்கவழக்கங்களைக் காலத்தோடு கண்டறிந்து அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றங்களுக்கும் கும்பல்களுக்கும் எதிரான இந்த நடவடிக்கையில் ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்களுடன் மாணவர்களும் இந்தத் திட்டங்களில் தூதர்களாகப் பங்கெடுப்பர்.
இதன் விவரங்களை மரினா பேயில் உள்ள ‘பார்க் ராயல் கலக்ஷன்’ ஹோட்டலில் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) நடந்த நிகழ்ச்சியில் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் அறிவித்தார்.
முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வின் சமூக செயல்பாட்டுக்கான அமைப்பு (Care) நடத்திய ஒருங்கிணைப்பு மாநாடு 2026 எனும் நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றும்போது திட்டத்தின் விவரங்களை விளக்கினார்.
புதிதாகத் தொடங்கவுள்ள திட்டம் 2027ஆம் ஆண்டின் முதற்பாதியில் செயல்படுத்தப்படும். அதில் 120 ஆசிரியர்களும் சமூகப் பணியாளர்களும் பங்கேற்பர்.
“நாட்டின் எதிர்காலமான நமது இளையர்கள் குற்றங்களில் சிக்காமல் இருக்க நாம் உதவ வேண்டும், அண்மைய தரவுகள் அவர்கள் குற்றச்செயல்களில் சம்பந்தப்படுவது அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகளில் 16 முதல் 21 வயதுடைய இளையர்கள் கைதிகளாக தண்டனை அனுபவிப்பது 2025ல் அதிகரித்துள்ளதை சிறைச்சாலைத் துறை பிப்ரவரி மாதம் வெளியிட்டது.


