பழுதடைந்த ரயிலால் சேதமடைந்த தண்டவாளத்தில் 12 புதிய விரிசல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையிலான சேவைத் தடை நாளையும் (செப்டம்பர் 30) தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி பாதிக்கப்பட்ட நான்கு ரயில் நிலையங்களுக்கு இடையிலான சேவையை முற்றிலுமாக வழக்க நிலைக்குக் கொண்டுவர இலக்கு கொண்டுள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 29) தெரிவித்தன.
வானிலையைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் பாதுகாப்பிற்கான முழுச் சோதனைகளையும் மேற்கொள்ள இந்தக் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவை கூறின.
செப்டம்பர் 28ஆம் தேதி நடந்தப் பரிசோதனையில் 12 புதிய விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், கிளமெண்டியிலிருந்து உலு பாண்டான் பணிமனை வரையிலான மேற்குப் பாதையில் மேலும் 10 தண்டவாளப் பகுதிகளை மாற்றுவதற்கு நிறுவனத்தின் பொறியாளர்களுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படும் என்று அவை செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்தன.
மேலும், தண்டவாளப் பகுதிகளை மாற்றியமைத்த பிறகு, பயணிகள் சேவையை மீண்டும் தொடங்குவதற்குமுன் பாதுகாப்பு, ரயில் ஒருமைப்பாட்டை உறுதிசெய்ய மேலும் சில சோதனைகளை செப்டம்பர் 30ஆம் தேதி பொறியாளர்கள் மேற்கொள்வார்கள் எனவும் அவை குறிப்பிட்டன.
செப்டம்பர் 25ஆம் தேதி பணிமனைக்குத் திரும்பும் போது பழுதான ரயிலால் தண்டவாளங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.
முன்னதாக, செப்டம்பர் 30ஆம் தேதி சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை, பொறியாளர்களும் ஊழியர்களும் இணைந்து 33 ரயில் தண்டவாளப் பகுதிகளை மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலையைக் கவனத்தில் கொண்டு சேதமான ரயில் தண்டவாளப் பகுதிகளை மாற்றும் பணி செப்டம்பர் 29ஆம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் சீ வொங் டாட் கூறினார்.
மேலும், கூடுதல் பரிசோதனைகள் செப்டம்பர் 30ஆம் தேதி நடத்தப்படும் என்றார் அவர்.
“பயணிகளின் புரிந்துணர்வுக்கும் பொறுமைக்கும் நன்றி. ரயில் சேவையை முழுமையாக விரைவில் தொடங்கத் தேவையான அனைத்தைப் பணிகளையும் எங்கள் குழு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது,” என தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்தார்.

