ஐபி எனப்படும் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களில் சேர்ந்துள்ளோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு காப்புறுதி நிறுவனங்களை மாற்றுவது என்பது பொருத்தமான தீர்வாக இருக்காது என்று சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்து உள்ளார்.
காப்புறுதி நிறுவனங்களை காப்புறுதியாளரே தன் விருப்பப்படி மாற்றிக்கொள்வதால் அதிகமான காப்புறுதிச் சந்தா செலுத்த நேரிடுவதோடு சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளும் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
“காப்புறுதி நிறுவனங்களை மாற்றிக்கொள்ளும் ஏற்பாட்டை முழுமையாகக் கட்டாயமாக்குவது என்பது சரியான தீர்வாக இருக்காது என்று சுகாதார அமைச்சு கருதுகிறது,” என்று திருவாட்டி ரஹாயு குறிப்பிட்டார்.
ஒருங்கிணைந்த காப்புறுத் திட்டங்களை வழங்கும் நிறுவனங்களுக்குள் மாறுவதற்கான சாத்தியம் குறித்த ஆய்வின் ஆக அண்மைய விவரங்களை வெளியிட்டு அவர் பேசினார்.
முழுமையாக வேறு நிறுவனங்களுக்கு மாறும் நடைமுறை அனைத்துலக அளவில்கூட சிறந்ததாக இல்லை என்றார் அவர்.
காப்புறுதித் திட்டத்தில் இடம்பெறும் அதிக இடர்ப்பாடுகளுக்கு ஏற்ப அதிக சந்தாத் தொகையை காப்புறுதியாளர் செலுத்தும் சாத்தியம் உள்ளதாக திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.
“தேசிய அளவில் இது அதிகச் செலவுகளுக்கு வழிவகுக்கும். அதுதான் அமைச்சின் கவலைக்குரிய அம்சம்.
“இத்தகைய தனியார் காப்புறுத் திட்டங்கள் நீடித்து நிலைக்கக்கூடியனவாக இருக்காது என்பது எங்களது தொடர் கவலை. நிபந்தனைகளின் மாற்றம் இதுபோன்றவை நடப்பதற்கான ஓர் அறிகுறி என்பதால் அதன் மீது கவனம் செலுத்த வேண்டிய அம்சம் ஏற்பட்டு உள்ளது,” என்று அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
கூடுதலாக தனியார் சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களை வழங்கிவரும் சிங்கப்பூரின் ஏழு காப்புறுதி நிறுவனங்களில் ஐந்து, கடந்த ஐந்தாண்டுகளில் லாப-நட்டத்தோடு போராடி வந்ததாக கடந்த ஜூலை மாதம் செய்தி வெளியானது. 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை, அதிக நிதி வழங்கும் வகையிலான காப்புறுதிக் கோரலைச் சந்தித்தன.

