நிறுவனங்கள் தங்களது வணிகச் செயல்பாடுகளை உருமாற்றம் செய்யும்போது அவற்றின் ஊழியர்களுக்கான திட்டங்களையும் உடனுக்குடன் முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.
ஊழியர்களுக்கான திட்டமிடலைப் பற்றி யோசிக்காமல் அதைப் பற்றி மனிதவளத் துறை பிறகு பார்த்துக்கொள்ளும் எனும் போக்கு இருக்கக்கூடாது என்றார் அவர்.
புதன்கிழமையன்று (செப்டம்பர் 16) நடைபெற்ற வருடாந்திர ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் வோங், நிறுவனங்களின் மறுசீரமைப்பின்போது வேலைகள் எவ்வாறு மாறுபடும், புதிய திறன்கள் என்னென்ன தேவைப்படும், மேலும் தற்போதைய ஊழியர்களுக்குப் புதிய, சிறந்த வேலைகளை ஏற்றுக்கொள்ள எவ்வாறு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து நிறுவனங்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் எனத் திரு வோங் கேட்டுக்கொண்டார்.
வர்த்தக நிறுவனங்களும் ஊழியர்களும் ஒன்றாக இணைந்து உருமாற்றமடைவது, சிங்கப்பூர் மேற்கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
கற்றலை வேலை மற்றும் வாழ்க்கைத் தொழிலுடன் நெருக்கமாக இணைப்பது, திறன் மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவு முறையை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவது ஆகியவை மற்ற இரு முக்கிய மாற்றங்களாகும்.
இந்த மூன்று முக்கிய மாற்றங்களையும் ஒருங்கிணைக்கும் மையமாக, புதிதாக இணைக்கப்பட்ட திறன்கள், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பின்கீழ் ‘கனெக்ட் பை எஸ்டபிள்யூடிஏ’ மையம் இயங்கும்.
முன்னதாக இயங்கிவந்த ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ மற்றும் ‘ஒர்க்ஃபோர்ஸ் சிங்கப்பூர்’ ஆகிய இரு அமைப்புகளும் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டு இந்தப் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
‘கனெக்ட் பை எஸ்டபிள்யூடிஏ’ வாழ்நாள் கற்றல் பயிற்சிக் கழகத்தின் இரண்டு தளங்களில் அமைந்துள்ளது
நிறுவனங்கள் அவற்றின் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளப் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவது, செயல்முறைகளை மேம்படுத்துவது அல்லது வர்த்தக மாதிரிகளைப் புதுப்பிப்பது போன்ற உருமாற்றங்களில் ஈடுபடுகின்றன.
ஆனால், பெரும்பாலான நேரங்களில் வணிக முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகே மனிதவள மேலாளரால் கையாளப்பட வேண்டிய விவகாரமாக ஊழியரணி தொடர்பான அம்சங்கள் பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது மிகவும் தாமதமான அணுகுமுறையாகும். நிறுவனங்கள் உருமாறும்போதே அதே நேரத்தில் அவற்றின் ஊழியர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். தொழில் உருமாற்றத்தில் ஊழியர்கள் அலட்சியப்படுத்தப்படும் இறுதிகட்டப் பரிசீலனையாக இருக்கக்கூடாது,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
