நீண்டகாலமாக வீடின்றித் தவிப்போர்க்கு இடைக்காலத் தங்குமிடங்கள் உதவலாம்

2 mins read
db2198eb-dc18-4c2a-ba6b-7ffd682a2235
முன்னாள் ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி மாணவர் விடுதி வளாகமாக இருந்த இடம் இடைக்கால இல்லமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. - படம்: சுந்தர நடராஜ்

சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த முதுநிலை ஆய்வாளர் டாக்டர் ஹேரி டான் நீண்டகாலமாக வீடற்ற நிலை குறித்து ஒரு தனிப்பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

அவரது ஆய்வில் நீண்டகாலமாக வீடற்ற நிலையை எதிர்கொள்பவர்கள் நிலையான, நீண்டகால வீட்டுவசதியைப் பெறுவதற்குத் தங்குமிட ஆதரவு ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவந்தது.

சிங்கப்பூரில் மொத்தம் ஏழு இடைக்கால இல்லங்கள் உள்ளன. கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் திறந்தவெளிகளில் உறங்குவோரில் பெரும்பாலானோர் தனிமனித மறைப்புநிலை (personal privacy), தனிப்பட்ட இடவசதி குறைபாடு குறித்த கவலைகளால் தங்குமிட வசதிகளை ஏற்றுக்கொள்வதில் இன்னும் தயக்கம் காட்டி வருவதாக நம்பப்படுகிறது.

ஆனால், தங்குமிடங்கள் உடல்ரீதியான பாதுகாப்பிற்கான ஓர் ஆதரவாக விளங்கியதோடு, நீண்டகால வீட்டுவசதித் திட்டங்களை நோக்கிய ஓர் இடைக்கால இடமாகவும் செயல்பட்டன.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, நியூ ஹோப் கம்யூனிட்டி சர்வீசஸ் அமைப்பால் நடத்தப்படும் இரண்டு இடைக்காலத் தங்குமிடங்களுடன் கைகோத்துள்ளது.

டிரான்சிட்பாய்ன்ட் அட் இயோ சூ காங், டிரான்சிட்பாய்ன்ட் அட் ஜாலான் குக்கோ ஆகியன அந்த இரு இடங்களாகும்.

தங்குமிடங்களில் மேம்பட்ட தனிமனித மறைப்புநிலையையும் கூடுதல் சேமிப்பு இடவசதியையும் வழங்க அவற்றை மறுவடிவமைப்பு செய்ய இந்த ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மேம்பாடுகள் திறந்தவெளிகளில் உறங்குவோர் தங்குமிட ஆதரவை நாடி வருவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டிரான்சிட்பாய்ன்ட் அட் இயோ சூ காங் இடைக்கால இல்லத்தில் மொத்தம் 126 பேர் தங்கலாம்.

புதன்கிழமை (ஜனவரி 7) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா அந்த இல்லத்தைப் பார்வையிட்டார்.

டிரான்சிட்பாய்ன்ட் அட் இயோ சூ காங் இடைக்கால இல்லத்தில் உள்ள வசதிகள்.
டிரான்சிட்பாய்ன்ட் அட் இயோ சூ காங் இடைக்கால இல்லத்தில் உள்ள வசதிகள். - படம்: சுந்தர நடராஜ்

தற்போது அந்த இல்லம் 60 விழுக்காடு நிரம்பியுள்ளது. முன்னாள் ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி மாணவர் விடுதி வளாகமாக இருந்த அந்த இடம் இடைக்கால இல்லமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இல்லத்தில் உள்ள அறை வசதிகள்.
இல்லத்தில் உள்ள அறை வசதிகள். - படம்: சுந்தர நடராஜ்

அங்கு தங்குபவர்கள் தங்களுக்கு என ஒரு வாடகை வீட்டைப் பெறுவதை இலக்காகக் கொண்டு உழைக்கும் வேளையில் ஆறு மாதங்கள்வரை அங்கே தங்கியிருக்கலாம். அந்த இல்லம் 2024 நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.

திறந்தவெளிகளில் உறங்குவோருக்கும் வீடற்றவர்களுக்கும் ஆதரவை வலுப்படுத்துவதற்காக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு $450,000 மதிப்பில் வீடற்ற நிலையைக் களைவதற்கென்று பங்காளித்துவ நிதியைத் தொடங்கவுள்ளது.

அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், வீட்டுவசதி நிலைத்தன்மையை அடைவதற்கு உதவவும், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து புத்தாக்கமான தீர்வுகளைச் சோதித்துப் பார்ப்பதற்கும் இந்த நிதி ஆதரவளிக்கும்.

திறந்தவெளிகளில் உறங்குவோருக்குத் தேவையான மருத்துவ, உளவியல், சமூக ஆதரவை வழங்குவதற்கான முன்னோடித் திட்டங்களைச் சோதிக்க நிறுவனங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.

இல்லத்தைப் பார்வையிடும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா.
இல்லத்தைப் பார்வையிடும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா. - படம்: சுந்தர நடராஜ்
குறிப்புச் சொற்கள்
வீடுதங்குமிடம்சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு