எல்லை தாண்டிய மோசடிகள்: சிங்கப்பூரில் 130 பேர் கைது

எல்லை தாண்டிய மோசடிகள்: சிங்கப்பூரில் 130 பேர் கைது

2 mins read
053518bb-f51d-488b-ba4f-8df2ddd5c088
மொத்தம் 3,018 பேர் கைது செய்யப்பட்டனர். - கோப்புப்படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட எல்லை தாண்டிய சட்ட அமலாக்க நடவடிக்கையில் 3,018 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 130க்கும் அதிகமானோர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை (மே 20) காவல்துறை அத்தகவல்களை வெளியிட்டது.

‘ஆப்பரே‌ஷன் ஃபிரன்டியர்+ 3’ எனும் சட்ட அமலாக்க நடவடிக்கையில், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, ஹாங்காங், மக்காவ், தென்கொரியா, புரூணை, மாலத் தீவுகள், கனடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3,200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். மின்வர்த்தக மோசடிகள், வேலை வாய்ப்பு மோசடிகள், முதலீட்டு மோசடிகள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து அந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதிக்கும் இம்மாதம் ஏழாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், கிட்டத்தட்ட 752 மில்லியன் டாலர் (963 மில்லியன் வெள்ளி) பறிபோனதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 13லிருந்து 85 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மோசடிகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஏறக்குறைய 102,000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 161 மில்லியன் டாலருக்கும் அதிகமான கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அமலாக்க நடிவடிக்கையின்போது சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையம், பறிபோன 69.3 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையின் தொடர்பில் 1,000க்கும் அதிகமான தனிநபர்களிடம் விசாரணை நடத்தியது.

சிங்கப்பூரில் 130க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 2,315 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 34.9 மில்லியன் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.

எல்லை தாண்டிய மோசடிக் கும்பலை முறியடிக்க சிங்கப்பூர்க் காவல் துறையினர், மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றினர். அதனைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவில் மலேசியர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

மொத்தம் 83 கைப்பேசிகள், 45 வங்கி மறைச்சொல் கருவிகள், அக்கும்பல் அதன் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் மென்பொருளைக் கொண்டிருந்த கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த முறியடிப்பு நடவடிக்கையை அடுத்து, பணம் பெறும் நோக்கில் புதிய வங்கிக் கணக்குகளைத் திறந்த அல்லது தங்களின் வங்கிக் கணக்குகளைப் பிறரிடம் ஒப்படைத்த அல்லது தங்களின் சிங்பாஸ் தகவல்களைப் பிறரிடம் கொடுத்த 18 தனிநபர்களை சிங்கப்பூர்க் காவல் துறை கைது செய்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஏமாற்றுகாவல்துறைமலேசியாஅமலாக்கம்