போக்குவரத்துக் கட்டணங்களில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து பொதுப் போக்குவரத்து மன்றம் ‘படிப்படியான ஓர் அணுகுமுறையைத் தொடர்ந்து கையாளும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
பயணிகள் உணரக்கூடிய தாக்கத்தைக் குறைக்க இந்த அணுகுமுறை உதவும் என்றார் அவர்.
விரைவில் நடப்புக்கு வரவுள்ள கட்டண உயர்வு குறித்து செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திரு சீ அக்டோபர் 16ஆம் தேதி இவ்வாறு பதிலளித்தார்.
பேருந்து, ரயில் கட்டணங்களை அட்டைவழி செலுத்தும் பெரியவர்களுக்கு டிசம்பர் 28ஆம் தேதி முதல் பத்து காசு உயரும். அதற்குமுன் அதிகரிக்கும் செலவுகளைப் போக்குவரத்து நிறுவனங்கள் சமாளிக்க உதவ, மன்றம் 2024ஆம் ஆண்டு ஆறு காசு உயர்த்தியது.
அதற்கும் முன்னதாக 2023, 2022, 2021 ஆகிய ஆண்டுகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
மிக அண்மைய கட்டண உயர்வு நடப்புக்கு வந்தபின், தெம்பனிசிலிருந்து ராஃபிள்ஸ் பிளேசுக்கு எம்ஆர்டி பயணம் மேற்கொள்ளும் பெரியவர், தற்போது செலுத்தும் $1.92க்குப் பதிலாக டிசம்பர் 28ஆம் தேதி முதல் $2.02 செலுத்த வேண்டியிருக்கும்.
எதிர்கால கட்டண மறுஆய்வுப் பயிற்சிகளுக்கு ஏதுவாக, பொதுப் போக்குவரத்து மன்றம் மாற்றியமைத்துள்ள 12.9 விழுக்காடு உயர்வு காரணமாக, பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒத்திவைக்கப்பட்ட கட்டண உயர்வை ஈடுகட்ட, அரசாங்கம் 2025ஆம் ஆண்டு கூடுதலாக $250 மில்லியன் மானியங்களை வழங்கவுள்ளது. பேருந்து, ரயில் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள $2 பில்லியன் நிதியை ஏற்கெனவே அரசாங்கம் வழங்கிவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்களின் நிதி நம்பகத்தன்மையையும் திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடுகள் உட்பட சேவைத் தரநிலைகளையும் உறுதிப்படுத்த அரசாங்க உதவி ஏதுவாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திரு சீ கூறினார்.