ஜோகூர் - சிங்கப்பூர் இடைவழி ரயில் சேவையைத் தொடர மலேசியா ஆர்வம்

ஜோகூர் - சிங்கப்பூர் இடைவழி ரயில் சேவையைத் தொடர மலேசியா ஆர்வம்

2 mins read
a0015820-afd0-4d76-bdf8-0773e7fa3ea2
ஆர்டிஎஸ் சேவை செயல்படத் தொடங்கிய பிறகும் இடைவழி ரயில் சேவையைத் தொடர மலேசியா சிங்கப்பூருடன் பேச்சு நடத்தும். - படம்: மலேசிய ஊடகம்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் பாரு சென்ட்ரலுக்கும் சிங்கப்பூரின் உட்லண்ட்சுக்கும் இடையே தெப்ராவ் இடைவழி ரயில் சேவையைத் தொடரும் நோக்கில் சிங்கப்பூருடன் மலேசியா பேச்சு நடத்த முயற்சி செய்யும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் இணைப்பு (ஆர்டிஎஸ்) செயல்படத் தொடங்கியதும் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

ஆர்டிஎஸ் சேவை இயங்கும்போது, அந்த இடைவழி ரயில் சேவையை நிறுத்த மலேசியாவும் சிங்கப்பூரும் முன்னதாக ஒப்புக்கொண்டதை அவர் சுட்டினார்.

இரு நாடுகளுக்கு இடையே அதிகமான இணைப்பு வழிகள் இருப்பதில் தவறில்லை என்று தாம் கருதுவதாக அவர் கூறினார். இதனால் பயணிகள் அதிக தெரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம் என்றார் அவர்.

அதனால் ஆர்டிஎஸ் சேவை செயல்படத் தொடங்கிய பிறகும் இடைவழி ரயில் சேவையைத் தொடர மலேசியப் போக்குவரத்து அமைச்சு சிங்கப்பூருடன் பேச்சு நடத்த முயற்சி மேற்கொள்ளும் என்றார் அவர். இதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் திரு லோக் இந்தத் தகவல்களைக் கூறினார்.

ஆர்டிஎஸ் 2026ஆம் ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைப்புச் சுரங்கப்பாதைகள் ஜோகூர் நீரிணையிலிருந்து 25 மீட்டர் உயரத்தில் அமையும் பாதையுடன் இணைக்கப்படும். இந்தப் பாதை சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தையும் ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகர் நிலையத்தையும் இணைக்கும்.

ஜோகூர் கடற்பாலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்படும் இச்சேவை, இது ஒவ்வொரு வழியிலும் ஒரு மணி நேரத்திற்கு ஏறக்குறைய 10,000 பயணிகளுக்கு சேவையாற்றும்.

குறிப்புச் சொற்கள்
ரயில் சேவை