அனுமதியின்றி வனவிலங்குகளைப் பொறி வைத்து பிடிப்பதோ கொல்வதோ குற்றம்

அனுமதியின்றி வனவிலங்குகளைப் பொறி வைத்து பிடிப்பதோ கொல்வதோ குற்றம்

படம்: சோனாஸ் கொர்பி/ஃபேஸ்புக்

12 Oct 2023 - 4:26 pm

1 mins read

வனவிலங்குகளை அதிகாரிகளின் அனுமதியின்றிப் பொறிவைத்துப் பிடிப்பதோ கொல்வதோ குற்றம் என தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.

சிறிய விலங்குகளைப் பிடிக்கப் பயன்படும் ‘ஸ்பிரிங் டிரேப்’ எனும் பொறிகளைப் பாசிர் ரிஸ் பூங்காவில் இருக்கும் பாறைக்கு அடியில் கண்டதாக ஃபேஸ்புக் பயனர் சோனாஸ் கொர்பி தனது பதிவில் கூறியதைத் தொடர்ந்து கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘சிங்கப்பூர் வைல்ட்லைப் சைட்டிங்ஸ்’என்னும் ஃபேஸ்புக் குழுவில் சோனாஸ் கொர்பி கடந்த ஞாயிற்றுக்கிழமை அவ்வாறு பதிவிட்டார்.

“இத்தகைய பொறிகள் சிறிய விலங்குகளை இலக்காகக் கொண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்,” என்று தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு நிர்வாகப் பிரிவு இயக்குநர் ஹாவ் சூன் பெங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

“வேட்டையாடுதல் விலங்குகளுக்குத் தேவையற்ற தீங்கை விளைவிக்கிறது. அத்துடன் பல்லுயிர்ச் சூழலையும் அது சீர்குலைக்கும்,” என்றார் அவர்.

அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் பொறிகளை தேசிய பூங்காக் கழகம் அகற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற பொறிகளைக் கண்டால், அவற்றை www.nparks.gov.sg/feedback என்னும் இணையத்தள முகவரி மூலம் கழகத்திடம் புகாரளிக்கலாம். அல்லது விலங்குநலன் தொடர்பு நிலையத்தை 1800-476-1600 என்ற 24 மணி நேரத் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

விலங்குநலச் சட்டத்தின்கீழ், அனுமதியின்றி வனவிலங்குகளைக் கொல்வதோ, பொறிவைத்துப் பிடிப்பதோ குற்றம் என்பதைத் திரு ஹாவ் நினைவுபடுத்தினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் $50,000 வரையிலான அபராதமோ ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
வனவிலங்குதேசிய பூங்காக் கழகம்