சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், முறையாக ஆவணங்களைச் சமர்ப்பிக்காத பத்து பயண ஏற்பாட்டு நிறுவனங்களை இடைநீக்கம் செய்துள்ளதாக புதன்கிழமை (டிசம்பர் 17) அறிவித்துள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காலத்தில் அந்த நிறுவனங்கள் சுற்றுலாக்களுக்கான புதிய முன்பதிவுகளை ஏற்கமுடியாது.
பட்டியலிடப்பட்டுள்ள அந்த 10 நிறுவனங்கள், தணிக்கை செய்யப்பட்ட ஆண்டுக்கான கணக்கு அறிக்கைகள், வணிக விவரங்கள் ஆகியவற்றை கழகத்துக்கு அனுப்பிவைக்கத் தவறிவிட்டன.
உரிமம் பெற்றுள்ள சுற்றுலா நிறுவனங்கள் நிதி ஆண்டு முடிவடைந்ததும், ஆறு மாதாங்களில் அந்த ஆவணங்களை கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இம்மாதம் 16ஆம் தேதி முதல் இடைநீக்கம் அமலுக்கு வரும். ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் வரையில் அல்லது ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் அமலில் இருக்கும்.
“இடைநீக்க காலத்தில் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டப் பணிகளை ஏற்பாட்டு நிறுவனங்கள் பூர்த்திசெய்யலாம். ஆனால் புதிய சுற்றுலாக்களுக்கானப் பதிவுகளைச் செய்ய அனுமதி இல்லை,” என்று கழகம் விவரித்தது. சிங்கப்பூர் சுற்றலாத் துறையின் நற்பெயரை பாதுகாக்க விதிமுறைகளைப் பின்பற்றாத பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கழகம் தயங்காது எனவும் அது எச்சரித்தது.
சிங்கப்பூரில் உரிமம் பெற்ற பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் பட்டியலைப் பார்வையிட பின்வரும் இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்: https://trust.stb.gov.sg

