சிங்கப்பூர் உள்பட தென்கிழக்காசிய நாடுகளில் செயல்படும் நடமாட்ட, உணவு விநியோகச் சேவை நிறுவனங்கள் எண்ணெய் விலை உயர்வைக் கண்காணித்து வருவதாகவும் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் தெரிவித்துள்ளன.
ஈரானில் தொடரும் பூசலால் உலக அளவில் எண்ணெய் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதையடுத்து பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகள் நான்கு நாள் வேலை வாரத்தை அமல்படுத்தியுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள கம்ஃபர்ட்டெல்குரோ (ComfortDelGro), தேசிய டாக்சி சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு எண்ணெய் விலை உயர்வை ஓட்டுநர்கள்மீது சுமத்தாமல் ஏற்றுக்கொள்கின்றன.
ஓட்டுநர்களின் நலனைப் பாதுகாத்து தற்போதைய சூழலில் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்த எண்ணெய்க்கான மானியங்களையும் கம்ஃபர்ட்டெல்குரோ வழங்கத் திட்டமிட்டுள்ளது.
உணவு விநியோகத் தளமான ஃபூட்பாண்டா, எஸ்ஸோ, ஷெல், கால்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பங்காளித்துவத்தைக் கொண்டுள்ளதால் எண்ணெய்க்கான 20 விழுக்காடு மானியத்தைத் தனது ஓட்டுநர்கள் பெறுவதாகக் குறிப்பிட்டது.
“கட்டணங்களை அவ்வப்போது மறுஆய்வு செய்து கார் மூலம் மேற்கொள்ளப்படும் விநியோகத்துக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளோம்,” என்று ஃபுட்பாண்டா பேச்சாளர் தெரிவித்தார்.
கிராப் நிறுவனம் சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள அதன் ஓட்டுநர்களுக்கு இடைக்கால மானியங்களை வழங்குவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி டான் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
கம்போடியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய நாடுகளில் செயல்படும் ஓட்டுநர்களுக்கு போனஸ் தொகை, கட்டணக் கழிவுகள், பெட்ரோல் பற்றுச்சீட்டுகளை வழங்கியிருப்பதாக திரு டான் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஓட்டுநர்களைப் பாதுகாப்பதுடன் அவர்களின் ஊதியத்துக்கும் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ள நீண்டகாலத் தீர்வுகளை வெவ்வேறு அரசாங்கங்களுடனும் பெட்ரோல், மின்வாக நிறுவனங்களுடனும் இணைந்து கலந்துரையாடி வருவதாக கிராப் சொன்னது.
தற்போதைய சூழலைக் கடந்துவர அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று திரு டான் மேலும் வலியுறுத்தினார்.

