பயணக் கட்டணத் தள்ளுபடிப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது: சிம்ப்ளிகோ

பயணக் கட்டணத் தள்ளுபடிப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது: சிம்ப்ளிகோ

2 mins read
c6e66e0d-bf2b-4048-b606-b611b63332df
அண்மைக் கோளாற்றால் ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிப்புக் கேட்ட சிம்ப்ளிகோ, பயணிகளின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆகஸ்ட் 20, 21ஆம் தேதிகளில் அன்றாடம் சராசரியாக 210,000 பயணங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காலை நேரக் கட்டணத் தள்ளுபடியைக் கிடைக்கவிடாமல் செய்த சிக்கல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக ‘சிம்ப்ளிகோ’ நிறுவனம் அறிவித்துள்ளது.

கட்டமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக எழுந்த இந்தச் சிக்கல், இரு நாள்களிலும் சிம்ப்ளிகோ ஈஸி-லிங்க், வங்கி அட்டைப் பரிவர்த்தனைகளைப் பாதித்தது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அந்நிறுவனம், ஃபேஸ்புக் பதிவில் அதனைத் தெரிவித்தது.

“‘சிம்ப்ளிகோ’ செயலியில் பயணிகள் இப்போது தங்களுக்குரிய தள்ளுபடியுடன்கூடிய சரியான கட்டணத்தைக் காண முடியும். இந்தக் கட்டணமே வசூலிக்கப்படும்,” என்றும் சிம்ப்ளிகோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காலை 7.45 மணிக்கு முன்பாகப் பயணத்தைத் தொடங்கியபோதிலும் கட்டணத் தள்ளுபடி கிடைக்கவில்லை என்று ரெடிட் சமூக ஊடகத்தில் பயணிகள் சிலர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

காலை நேரக் கட்டணத் திட்டத்தின் கீழ், பொது விடுமுறைகள் தவிர்த்து வாரநாள்களில் காலை 7.45 மணிக்கு முன்னர் எந்தவொரு ரயில் நிலையத்திலும் பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கு S$0.50 வரை கட்டணத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்தத் தள்ளுபடி S$0.50 அல்லது ரயில் பயணக் கட்டணம் ஆகிய இரண்டில் எது குறைவோ அதன் அடிப்படையில் வழங்கப்படும்.

காலை உச்ச நேரத்திற்கு முன்னரே, மக்கள் பயணம் செய்வதை ஊக்குவிப்பதற்காக 2017ஆம் ஆண்டு டிசம்பரில் இத்திட்டம் அறிமுகம் கண்டது.

அண்மைக் கோளாற்றால் ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிப்புக் கேட்ட சிம்ப்ளிகோ, பயணிகளின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி தெரிவித்தது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கிளை நிறுவனமான சிம்ப்ளிகோ, பொதுப் போக்குவரத்து பயணச்சீட்டு, பயண அட்டை சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. 2024ஆம் ஆண்டு, ஈஸி-லிங்க், டிரான்சிட்லிங்க் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்பட்டு இது உருவாக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிம்ப்ளிகோசலுகைபயணம்பயணிகள்கோளாறுநிலப் போக்குவரத்து ஆணையம்