ஜப்பானின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ‘பீச் ஏவியேஷன்’ டிசம்பர் 5ஆம் தேதி சிங்கப்பூர் - ஒசாகா விமானச் சேவையைத் தொடங்கவிருக்கிறது.
‘ஆல் நிப்போன் ஏர்வேஸ்’ குழுமம், ‘பர்ஸ்ட் ஈஸ்டர்ன் ஏவியேஷன் ஹோல்டிங்கிஸ்’, ‘இன்னோவேஷன் நெட்வொர்க் கார்ப்பரேஷன் ஆஃப் ஜப்பான்’ ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி அது.
சிங்கப்பூருக்கும் ஒசாகாவுக்கும் இடையிலான நேரடி விமானச் சேவையை 14 ஆண்டுகளில் தொடங்கவிருக்கும் முதல் ஜப்பானிய விமான நிறுவனமாக ‘பீச் ஏவியேஷன்’ திகழும்.
‘ஸிப்ஏர்’, ‘ஏர் ஜப்பான்’ ஆகிய நிறுவனங்கள் தற்போது சிங்கப்பூருக்கும் தோக்கியோவுக்கும் இடையிலான விமானச் சேவைகளை மட்டுமே செயல்படுத்துகின்றன.
‘பீச் ஏவியேஷன்’ விமான நிறுவனத்தின் புதிய பயணப் பாதையின் தொடக்கம், எதிர்வரும் ‘உலக எக்ஸ்போ 2025’ முன்னிட்டு ஒசாகாவின் பயணத்துறைக்குப் புத்துயிரூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘உலக எக்ஸ்போ 2025’ அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஒசாகாவில் நடைபெறவிருக்கிறது. அதற்கு 28.2 மில்லியன் பேர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கு விமான நிறுவனத்தைக் கொண்டுசெல்லும் முயற்சிக்கு நீண்டகாலமாகவே திட்டமிடப்பட்டு வந்ததாகவும் கொவிட் கிருமிப்பரவலால் அது தாமதமானதாகவும், முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ‘பீச் ஏவியேஷன்’ன் தலைமை நிறுவனத் திட்டமிடல் அதிகாரியான சத்தொரு எண்டோ கூறினார்.
சிங்கப்பூர் - ஒசாகா ஒருவழிப் பயணத்துக்கான ஆக மலிவான கட்டணம் $164.20ஆக உள்ளது. ஆகஸ்ட் 29 முதல், நுழைவுச்சீட்டுகளை விமான நிறுவனத்தின் இணையத்தளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
கட்டண விவரங்களுக்கு, str.sg/CYVt எனும் இணையத்தளத்தை நாடலாம்.

