இடைப்பயணத்தின்போது கொவிட்-19 தொற்றியிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு: அதிகாரிகள்

இடைப்பயணத்தின்போது கொவிட்-19 தொற்றியிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு: அதிகாரிகள்

2 mins read
48f95f9e-04df-4e4a-bc3e-eb98a85f2cfe
-

சிங்கப்பூரில் இடைப்பயணம் செய்து தென்கொரியாவில் கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்ட பயணி சிங்கப்பூரில் இந்நோய் தொற்றுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"இந்த நோய்த்தொற்றுக்கான மூலக்காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் உள்ளது. இதன் தொடர்பான விசாரணைகளும் நடந்து வருகின்றன," என்று சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையமும் தெரிவித்தன. "கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கப்பூரில் அவரது தொடர்புத் தடங்களும் ஆராயப்பட்டு வருகின்றன," என அந்த இரண்டு அமைப்புகளும் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டன.

ஜூலை 21ஆம் தேதி நியூசிலாந்திலிருந்து வெளியேறி மறுநாள் தென்கொரியாவை அடைந்த பின்னர் நான்கு மணிக்குள் செய்யப்பட்ட சோதனை ஒன்று அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தது. எந்த அறிகுறிகளும் இல்லாத அவருக்கு, சாங்கி விமான நிலையத்தில் இந்நோய் தொற்றியிருப்பதாக தென்கொரிய அதிகாரிகள் நியூசிலாந்திற்குத் தெரிவித்தனர்.

ஆனால் இந்த விளக்கத்தின்படி நோய்த்தொற்று உருவாவதற்கான காலம் 24 மணி நேரத்திற்குக் குறைவாக இருப்பதாக சிங்கப்பூர் அதிகாரிகள் சுட்டினர்.

மனித உடலுக்குள் இந்நோய்த்தொற்று உருவாகும் காலக்கட்டம் சராசரியாக ஐந்து ஆறு நாட்கள் வரை ஆவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் இந்த விவகாரம் குறித்து அணுக்கமான தொடர்பில் இருப்பதாக சுகாதார அமைச்சும் சிவில் விமானத்துறை ஆணையமும் தெரிவித்தன.

சிங்கப்பூரில் இடைப்பயணம் செய்யும் விமானப் பயணிகள், மற்ற பயணிகளிலிருந்து எல்லா நேரங்களிலும் பிரிந்திருப்பதை தற்போதைய கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உறுதி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையப் பணியாளர்கள், பயணிகளுடன் உரையாடும்போது தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகளை அணிகின்றனர். பயணிகள் அனைவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிந்தே இருக்கவேண்டும் என்று சாங்கி விமான நிலையம் கூறியது.

பாதுகாப்பு இடைவெளி, வெப்பநிலையை அளவிடுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் இடைப்பயணம் செய்பவர்களுக்கு அதே கட்டுப்பாடுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.