பத்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட புதையல் வேட்டைக்காரர்

பத்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட புதையல் வேட்டைக்காரர்

2 mins read
42b4d9bd-0d42-4654-8110-007349e34c7e
தங்கள் முதலீட்டுக்கு லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மொத்தம் 161 முதலீட்டாளர்கள் கப்பலைக் கண்டுபிடிக்க தாம்சனுக்கு 12.7 மில்லியன் அமெரிக்க டாலரை (9.4 மில்லியன் பவுண்டு) வழங்கியிருந்தனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கப்பல் விபத்தில் மூழ்கிய தங்கக் காசுகள் இருக்கும் இடத்தை வெளியிட மறுத்துவந்த அமெரிக்க ஆழ்கடல் புதையல் வேட்டைக்காரர், பத்தாண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், 500 காசுகள் எங்குள்ளன என்பது தொடர்ந்து ரகசியமாக இருந்து வருகிறது.

73 வயதான டாமி தாம்சன் என்பவர், 1857ல் சவுத் கரோலினா கடலோரத்தில் மூழ்கிய ‘எஸ்எஸ் சென்ட்ரல் அமெரிக்கா’ என்ற கப்பலிலிருந்து பல மில்லியன் டாலர் மதிப்பிலான புதையலை 1988ல் கண்டுபிடித்தார்.

 இந்தக் கப்பல் ‘தங்கக் கப்பல்’ (Ship of Gold) என்றும் அழைக்கப்படுகிறது.

புதையலைக் கண்டுபிடிப்பதற்காக தாம்சனின்  திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட லாபப் பங்கைக் கொடுக்காமல் அவர் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். 

பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அவர், குற்றவியல் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் 2015ல் சிறையில் அடைக்கப்பட்டார்.

1857ஆம் ஆண்டில் கப்பல் மூழ்கியபோது, சான் பிரான்சிஸ்கோவில் புதிதாக செய்யப்பட்ட 30,000 பவுண்டு தங்கக் காசுகளை இந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது.

வங்கிகளுக்கான இருப்பை உருவாக்குவதற்காகக் கிழக்குக் கடற்கரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலின் புதையல், 7,000 அடி ஆழத்தில் கடலின் அடியில் மூழ்கியது. 

425 பயணிகளும் சிப்பந்திகளும் உயிரிழந்த இந்த விபத்து, 1857ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்கும் காரணமாக அமைந்தது.

தங்கள் முதலீட்டுக்கு லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மொத்தம் 161 முதலீட்டாளர்கள் கப்பலைக் கண்டுபிடிக்கத் தாம்சனுக்கு 12.7 மில்லியன் அமெரிக்க டாலரை (9.4 மில்லியன் பவுண்டு) வழங்கியிருந்தனர்.

ஓஹியோவின் கொலம்பசில் உள்ள பேட்டல் மெமோரியல் இன்ஸ்டிடியூட்டில் (Battelle Memorial Institute) ஆழ்கடல் பொறியியலாளராகப் பணியாற்றிய தாம்சனும் அவரது குழுவினரும் 1988ல் ஆயிரக்கணக்கான தங்கக் கட்டிகளையும் காசுகளையும் மீட்டெடுத்தனர். அவற்றில் பெரும்பாலானவை 2000ஆம் ஆண்டில் தங்க விற்பனைக் குழு ஒன்றிடம் சுமார் 50 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டன.

புதையல் விற்பனையிலிருந்து தங்களுக்கு இன்னும் எந்த லாபமும் கிடைக்கவில்லை என்று கூறி, முதலீட்டாளர்கள் 2005ஆம் ஆண்டில் தாம்சன் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்