உற்பத்தித் துறையில் உள்ள மேம்பாடுகள் காரணமாக, தொழில்துறைக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நடவடிக்கை மேலும் சிக்கலாகி உள்ளது.
இருப்பினும், அத்தகைய நீரை முறையாகச் சுத்திகரிக்கும் நடவடிக்கை, சிங்கப்பூர் தண்ணீர் பாதுகாப்பின் அதிமுக்கியத் தூணாக விளங்குகிறது.
“தொழில்துறைகளில் கழிவுநீரைச் சுத்திகரிப்பது முன்னர் எளிமையாக இருந்தது. பயன்படுத்தப்படும் பொருள்கள் தனித்துவமிக்கதாக இருப்பதால், கழிவுநீரைச் சுத்திகரிப்பது மேலும் சிக்கலாகிவிட்டது,” என்று ‘இகோ ஸ்பெஷல் வேஸ்ட் மேனேஜ்மன்ட்’ நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் லேரி சியோங் கூறினார்.
உதாரணமாக, இப்போதுள்ள தொழில்துறைக் கழிவுகளில் கூடுதலான வேதிப்பொருள்கள் அடங்கியிருக்கலாம். அதனால், அவற்றை அகற்ற மேலும் சிக்கலான சுத்திகரிப்பு முறை தேவைப்படலாம்.
தொழில்துறைக் கழிவுநீர் அகற்றுவதற்குப் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்வதற்கான மிகச் சிறந்த நடைமுறைகளை அந்நிறுவனம் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை (டிசம்பர் 16) செய்து காண்பித்தது.
கழிவுநீர்க் குழாய்களில் நச்சுகலந்த, கேடு விளைவிக்கும் நீர் புகுந்தால், நீர் மீட்பு ஆலைகளில் உள்ள சுத்திகரிப்புச் செயல்முறைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
அதோடு, சட்டவிரோதமாக வெளியேற்றப்படக்கூடிய ‘பென்ஸீன்’ போன்ற பொருள்கள், கழிவுநீர்க் குழாய்களையும் நீர் மீட்பு ஆலைகளையும் பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் நச்சுவாய்ந்த புகையை அல்லது தீ, வெடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய பொருள்களை நுகரக்கூடும்.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கழிவுநீர்க் குழாய், வடிகால் சட்டத்திற்கான திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, பொதுக் கழிவுநீர்க் குழாய் முறையைச் சேதப்படுத்தும், சிங்கப்பூரின் நீர் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது ஊழியர்களை ஆபத்தான நிலையில் வைக்கும் நிறுவனங்களைச் சமாளிப்பதில் பொதுப் பயனீட்டுக் கழகம் மேலும் அதிகம் செய்யலாம்.
குறைந்தபட்சத் தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படும். அதிகபட்சத் தண்டனைகள் உயர்த்தப்படும். மீண்டும் குற்றம் புரிவோர் அதிக தண்டனைகளை எதிர்நோக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

