வயிற்றுப் படலத்தில் பரவும் புற்றுநோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, நோயாளிகளின் சராசரி வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை முறையைச் சிங்கப்பூர் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
தற்போதைய நிலையில் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சராசரி வாழ்நாள் ஒன்பது மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் குறிப்பிட்ட புரதத்தை இலக்காகக் கொண்டு, ‘நானோபாடி’ எனப்படும் சிறிய ரக மருந்து வகுப்பை உருவாக்க ஆய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டாத வகையிலும் பக்கவிளைவுகளின் அபாயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் உயிரணுக்கள், விலங்கு மாதிரிகள் மற்றும் ஹைலூரோனிக் அமிலத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட மனிதப் புற்றுநோய் மாதிரிகள் ஆகிய மூன்றிலும் இந்த சிகிச்சை முறை ஆய்வு செய்யப்பட்டது.
அனைத்து நிலைகளிலும், பக்கவிளைவுகள் ஏதுமின்றி புற்றுநோய் உருவாக்கத்தை இந்த மருந்து வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது உறுதியானது. இரைப்பை, குடல், மார்பகம் அல்லது சினைப்பை ஆகிய முதன்மைப் பகுதிகளில் உருவாகும் புற்றுநோய், வயிற்றின் உட்புறப் படலத்துக்குப் பரவும்போது இந்த வயிற்றுப் படலப் புற்றுநோய் ஏற்படுகிறது.
ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட இந்த நானோபாடி, விலங்கு மாதிரிகளிலும் மனித திசு மாதிரிகளிலும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுப்பது கண்டறியப்பட்டது. வயிற்றுப் பகுதியில் ‘அசைடீஸ்’ எனப்படும் திரவம் அசாதாரணமாகச் சேரும்.
இதில் உள்ள இரண்டு புரதங்களே புற்றுநோய் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்பதை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்தனர். புதிதாகக் கண்டறியப்பட்ட நானோபாடி, இந்த இரண்டு புரதங்களின் செயல்பாட்டையும் தடுத்து நிறுத்துகிறது.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை, சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் மையம் ஆகியவற்றில் அரிய கட்டிகளுக்கான துறைத் தலைவர் டாக்டர் ஜானி ஆங் இதுகுறித்து கருத்துரைத்தார்.
“உலகளவில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினருக்கும் குடல் புற்றுநோயாளிகளில் 30 விழுக்காட்டினருக்கும் சினைப்பைப் புற்றுநோயாளிகளில் 70 விழுக்காட்டினருக்கும் இந்த நோய் வயிற்றுப் படலத்துக்குப் பரவுகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஆண்டிற்கு 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வழக்கத்தில் உள்ள ‘ஹைபெக்’ எனும் உயர்வெப்ப அறுவைசிகிச்சை முறை, அறுவைசிகிச்சையுடன் சூடான வேதிச்சிகிச்சை மருந்தைப் பயன்படுத்திப் புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதாகும்.
எனினும், பத்தில் ஒன்பது நோயாளிகளுக்கு இச்சிகிச்சை முறை பொருத்தமாக இருப்பதில்லை. இதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வைத் தொடர்ந்ததாகக் கூறிய டாக்டர் ஆங், புற்றுநோய் உயிரணுக்கள் பெருகுவதற்கு வயிற்றுத் திரவத்தில் உள்ள மூலக்கூறுகளே காரணம் என்பதைக் கண்டறிந்ததாகத் தெரிவித்தார்.
புற்றுநோய் உயிரணுக்களை நேரடியாக இலக்கு வைப்பதற்குப் பதிலாக, அவை வாழும் திரவத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் பரவுவதைத் தடுக்க முடியும் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 வகையான புற்றுநோய்களைச் சேர்ந்த 397 மாதிரித் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில், PAI-1 மற்றும் S100A10 ஆகிய இரண்டு புரதங்களே புற்றுநோய் வளர்ச்சிக்குக் முக்கியக் காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
