கத்திக்குத்து சம்பவங்களில் ஈடுபடுவோர்க்கு மனநல பாதிப்பிருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படலாம் என உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா.சண்முகம் கூறினார்.
நவம்பர் 4ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் ஹவ்காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அனைத்து கத்திக்குத்து சம்பவங்களையும் சிங்கப்பூர் மிகவும் கடுமையான குற்றமாகக் கருதுகிறது என்றார் அமைச்சர் சண்முகம்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் திறம்பட கையாள்வதற்கும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்கும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டோர் தொடர்புடைய கத்திக்குத்து குற்றங்களைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான உத்திகளைக் கையாள்வதற்கும் அச்சம்பவங்களை உள்துறை அமைச்சு கண்காணித்து வருகிறதா எனத் திரு டெனிஸ் டான் கேள்வியெழுப்பினார்.
அச்சம்பவங்கள் குறித்த தகவல்களை அமைச்சு கண்காணிக்கவில்லை என்றாலும் அக்குற்றங்களை மிகவும் கடுமையானதாக எடுத்துக்கொண்டு, அவற்றைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அது எடுத்துவருவதாக அவர் விவரித்தார்.
பொது இடங்களில் கத்தி போன்ற தாக்குதலுக்குப் பயன்படுத்தும் ஆயுதங்களை எடுத்துச்செல்வது கடுமையான குற்றம் எனக் கூறிய அமைச்சர், குறிப்பிட்ட சில கத்திகளின் விற்பனையை அரசு கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
குற்றவாளிகள் கத்திக்குத்து குற்றங்களில் ஈடுபட அவர்களைப் பாதித்திருக்கும் மனநலப் பிரச்சினை காரணமாக இருந்தால், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படலாம் எனத் திரு சண்முகம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில், இவ்வாண்டின் முற்பாதியில் கத்திக்குத்து சம்பவங்கள் போன்ற வன்முறை குற்றங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 59 சம்பவங்கள் நடந்தன. இவ்வாண்டு அவை 75ஆக அதிகரித்துள்ளன.

