ஈசூனில் இரண்டு வீடுகளைச் சேதப்படுத்திய மரக் கிளை

ஈசூனில் இரண்டு வீடுகளைச் சேதப்படுத்திய மரக் கிளை

2 mins read
cb044b76-40e6-4673-bde6-434033a88ca1
ஜூலை 31ம் தேதி, ‘கோல்டன் லேன்ஸ்கேபிங்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மரம் ஒன்றை அகற்றிக்கொண்டிருந்தனர். - படம்: சல்ஃபாரினா

ஆடவர் ஒருவர் வீட்டில் இளைப்பாறிக்கொண்டிருந்த நேரத்தில், மரக் கிளை ஒன்று விழுந்து அவரது சன்னலைச் சேதப்படுத்தியது. அதனால், அவர்மீது சன்னல் கண்ணாடித் துண்டுகள் பாய்ந்தன.

இருப்பினும், திரு இர்ஃபான் என்ற அந்த ஆடவருக்குக் காயங்கள் ஏற்படவில்லை.

சம்பவம், ஜூலை 31ஆம் தேதி காலை 9.30 மணிவாக்கில் நடந்தது. புளோக் 259, ஈசூன் ஸ்திரீட் 22க்கு அருகில் உள்ள மரம் ஒன்றை ‘கோல்டன் லேன்ஸ்கேபிங்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அகற்றிக்கொண்டிருந்தபோது, சம்பவம் நடந்தது.

இரண்டு வீடுகள் சேதமுற்றதாக நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்சன் லாம் கூறினார்.

‘‘உரக்கச் சத்தம் கேட்டது. முழு கட்டமைப்பே இடிந்து விழப்போவதுபோல் இருந்தது,’’ என்று வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பயிற்றுவிப்பாளரான திரு இர்ஃபான் கூறினார்.

பக்கத்து அறையில் இருந்த அவரது மனைவி திருவாட்டி சல்ஃபாரினாக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

வீட்டிற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றபோது, வசிப்பிட அறையின் சுவரில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. சன்னல் கம்பிகள் வளைந்து காணப்பட்டன.

திரு லாம் அக்குடும்பத்தைப் பார்க்கச் சென்றார். நிறுவனம் சேதத்திற்குச் செலவிடும் என்றார் அவர். மரம் அழுகியிருந்ததால், அதன் கட்டமைப்பு வலுவிழந்ததாக அவர் கூறினார். மரத்தை அகற்றுவதற்கான பணிகள் நிலைமையை மேலும் மோசமாக்கியதால் மரக் கிளை விழுந்து இரண்டு வீடுகளைச் சேதப்படுத்தியதாக அவர் சொன்னார்.

இருப்பினும், யாருக்கும் காயம் இல்லை என்றார் அவர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நகர மன்றம் உதவிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்