காத்தோங் வட்டாரத்தில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில், மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 38 வயது ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் அக்டோபர் 13ஆம் தேதி பிற்பகல் வேளையில் நிகழ்ந்தது. அக்டோபர் 13ஆம் தேதி பிற்பகல் 2.35 மணியளவில் கிரான்போர்ன் சாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதியன்று தெரிவித்தன.
இதுகுறித்து மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அந்த ஊழியர் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மரத்தின் அடிப்பகுதி சரிந்து விழுந்ததால் அவரும் மரத்தோடு கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சுயநினைவு இழந்த நிலையில் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் சதிச்செயல் ஏதும் இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என்று முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறை கூறியுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பாதிக்கப்பட்ட ஊழியர் ‘சோ அண்ட் டான் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், மரம் ஏறுதல் உள்ளடங்கிய அனைத்து மரம் வெட்டும் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
