சிங்கப்பூரில் வீடுகளின் விலையும் அடைமானக் கடன்களின் அளவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெகுவாக உயர்ந்தபோதிலும், வீடு வாங்குபவர்கள் தங்களது சொந்தப் பணத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இது, சொத்து விலையேற்றத்திற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அதிகக் கடன் பெறப்படவில்லை என்பதை உணர்த்துவதாக ஓசிபிசி வங்கியின் பயனீட்டாளர் ஈட்டுக்கடன் பிரிவின் தலைவர் டோக் கியோக் பெங் கூறியுள்ளார்.
அதற்குப் பதில், முன்பணம் செலுத்த அதிக ரொக்கம் அல்லது மத்திய சேம நிதி சேமிப்பை வீடு வாங்குவோர் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
ஓசிபிசி வங்கியிடம் கடன் பெற்றவர்களின் வருமானம், சொத்து விலைகளைவிட வேகமாக வளர்ந்ததே இதற்குக் காரணம் என்று திரு டோக் கூறினார்.
2025ஆம் ஆண்டில் தனியார் சொத்து சந்தைப் பரிவர்த்தனைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவற்றுக்கு ஓசிபிசி வங்கியே நிதியளித்துள்ளது.
“எங்களிடம் கடன் வாங்குபவர்களின் சராசரி வயது சுமார் 38ஆக இருப்பதால், அவர்களில் பெரும்பாலோர் பல ஆண்டுகளாகச் சேமித்துள்ளனர் அல்லது அவர்களிடம் வீடு வாங்குவதற்குப் போதுமான மத்திய சேம நிதிச் சேமிப்பு உள்ளது. இது அவர்கள் வாங்கவேண்டிய கடனின் அளவைக் குறைக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் முதல் பாதி வரை வீட்டின் விலையும் அடைமானக் கடன்களின் அளவும் அதிகரித்தபோதிலும், பொதுவான கடன்களின் அளவு அந்த அளவிற்கு வேகமாக உயரவில்லை என்பதை ஓசிபிசி வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
புதிய தனியார் வீடுகளுக்கான விற்பனை விலை 2021 முதல் இவ்வாண்டின் முதல் பாதி வரை 49 விழுக்காடு உயர்ந்தது. அதே வேளை, சராசரி வீட்டுக் கடனின் அளவு 35 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது.
தனியார் மறுவிற்பனை வீடுகளின் விலை 36 விழுக்காடு உயர்ந்த நிலையில், கடன்கள் 32 விழுக்காடு வளர்ந்தன.
தனியார் சொத்துகள் இவ்வாறிருக்க, வீவக மறுவிற்பனை வீடுகளைப் பொறுத்தவரை, விற்பனை விலை மற்றும் சராசரி வீட்டுக் கடன்கள் ஆகிய இரண்டுமே 32 விழுக்காடு அதிகரித்துள்ளன.
வீடு வாங்குபவர்கள் கடனைச் சார்ந்திருப்பதைவிட, வீட்டை வாங்குவதற்கான தொகையின் பெரும்பகுதியை ரொக்கம் அல்லது மத்திய சேம நிதிச் சேமிப்பு வாயிலாகப் பூர்த்தி செய்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது என்றார் திரு டோக்.
இருப்பினும், வீடுகளின் விலை உயர்வு பல வீட்டு அடைமானக் கடன்களை $1 மில்லியனுக்கும் அதிகமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் புதிய தனியார் வீடுகளை வாங்க கடன் பெற்றோரில் பத்தில் எட்டுப் பேர் $1 மில்லியனுக்கும் குறையாத அடைமானக் கடன்களைப் பெற்றுள்ளனர். இது, 2021ஆம் ஆண்டில் பத்தில் நால்வராக மட்டுமே இருந்தது என்று திரு டோக் குறிப்பிட்டுள்ளார்.
