சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் ஆர்எஸ்எஸ் பெர்சிஸ்டன்ஸ் போர்க்கப்பலில் தங்கி, தமது நாட்டுக்கான சேவையை ஆற்றிவருகிறார் இரண்டாம் சார்ஜண்ட் பாஸ்கர் குருபிரகாஷ்.
முழுநேர தேசிய சேவையை கடந்த ஆண்டு முடித்துவிட்டு போர்க்காலப் படை வீரர் பயிற்சிக்குத் திரும்பிய அவருக்கு ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
படகுகளை ஏந்திச் செல்லக்கூடிய கொள்திறனையும் ஹெலிகாப்டர்களைத் தரையிறக்கி பறக்கவிடும் ஆற்றலையும் கொண்ட ஆர்எஸ்எஸ் பெர்சிஸ்டன்ஸ், ஆர்எஸ்எஸ் எண்டூரன்ஸ் இவ்விரு போர்க்கப்பல்கள் ‘எக்சர்சைஸ் டிரைடண்ட்’ எனும் சிங்கப்பூர் - ஆஸ்திரேலிய ஆயுதப்படைகளின் கூட்டுப் பயிற்சியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
அந்தக் கப்பலிலிருந்து கரைக்குச் செலுத்தப்படும் படகில் LARC V எனப்படும் நீரிலும் தரையிலும் செல்லும் குறைந்த எடை சரக்கு மறுவிநியோக வாகனத்தை வழிநடத்தும் பொறுப்பு குருபிரகாஷ் வசம் உள்ளது.
தம் குழுவினருடன் இணைந்து அந்தப் பணியைச் செய்து பயிற்சியின் அங்கமாக சரக்குகளைக் கப்பலிலிருந்து கரைக்குக் கொண்டு செல்கிறார் இவர்.
கரையில் போர் அடிப்படையில் சண்டையிடும் படையினருக்குத் தேவையான சரக்குகள் வழங்கப்பட்டவுடன் இவர் மீண்டும் அந்த வாகனத்தை படகில் ஏற்றி விடுவார். அந்தப் படகு, போர்க்கப்பலுக்குள் வந்து சேர்ந்துவிடும்.
இத்தகைய பாவனைப் பயிற்சிகளை ஆஸ்திரேலியாவில் செய்வது சிறப்பானதாக இருப்பதாக இவர் கூறினார்.
தம் குழுவினரையும் வாகனங்களையும் தயார்நிலையில் வைத்திருப்பது குருபிரகாஷின் பணிகளில் முக்கியமானது.
குழுவை வழிநடத்துவதால் தலைமைத்துவத் திறனும் வளர்வதாகச் சொன்ன குருபிரகாஷ், நிச்சயமற்ற சூழல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் அறியமுடிந்தது என்றார்.
அதோடு, கப்பல் சிப்பந்திகளின் வாழ்க்கைப் பற்றி மேலும் அறிய முடிந்தது என்றும் ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுவருவதாகவும் முதல் முறையாக எக்சர்சைஸ் டிரைடண்டில் பங்கெடுத்த இவர் தெரிவித்தார்.
இவரைப் போன்ற 1,900க்கும் மேற்பட்ட தேசிய சேவையாளர்கள், போர்க்காலப் படை வீரர்கள், முழுநேர படை வீரர்கள் நவம்பர் 6 முதல் 15 வரை நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
கடற்படையின் Fast Craft Utility அதிவேக படகுகளில் நான்கு, Fast Craft Equipment and Personnel (FCEP) படகில் 10 என மொத்தம் 14 படகுகளை ஒவ்வொரு Landing Ships Tank (LST) வகை போர்க்கப்பல்கள் கொண்டுள்ளன.
நகர்ந்துகொண்டிருக்கும்போதே ஹெலிகாப்டர்களை இறக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு.
நான்கு மணி நேர இடைவெளியில் குழுக்கள் குழுக்களாக கப்பலின் தளபத்திய மையம் செயல்படுகிறது. கப்பலைச் சுற்றி எந்த அந்நிய கப்பலோ படகோ வராமல் இருப்பதை உறுதிசெய்ய கண்காணிப்பாளர்களும் ஈடுபடுகின்றனர்.
எக்சர்சைஸ் டிரைடண்ட் பயிற்சியில் கடற்படையின் கப்பல், ராணுவ வீரர்களை ஏந்திச் செல்கிறது. அதோடு, ஹெலிகாப்டரைத் தரையிறக்குவதால் ஆகாயப் படைக்கும் சேவையளிக்கிறது.
முப்படைகள் சங்கமிக்கும் 141 மீட்டர் நீளமும் 6,000 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பலை கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இயக்குகின்றனர்.
இந்தப் பயிற்சியை நேரில் காணவும் ஆயுதப்படை வீரர்களின் அனுபவங்களைக் கண்கூடாகப் பார்த்து அறியவும் செய்தியாளர்கள் அழைக்கப்பட்டனர்.
அதன் அங்கமாக ஆர்எஸ்எஸ் பெர்சிஸ்டன்ஸ் கப்பலில் ஓரிரவு தங்கி, வெவ்வேறு பணிகளில் ஈடுபடுவோரைக் கண்டு, உரையாடி, நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் போர்க்கப்பலிலிருந்து சினூக் ஹெலிகாப்டர் மூலம் கரைக்குச் செய்தியாளர்கள் கொண்டுவரப்பட்டனர்.
2001ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த இந்தக் கப்பல் மனிதாபிமான பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் பாதிக்கப்பட்ட இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்திலும் 2014ஆம் ஆண்டு இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த ஏர்ஏசியா விமானம் QZ8501 ஜாவா கடலில் விழுந்ததை அடுத்தும் இந்தக் கப்பல் நிவாரண பணிகளுக்கு அனுப்பப்பட்டது.
கப்பலுக்கும் கரைக்கும் இடையிலான ஆகாயவழிப் போக்குவரத்தில் ஈடுபடும் ஹெலிகாப்டர்களில் ஒன்றான CH-47F வகை சினூக் ஹெலிகாப்டரின் விமானப் பொறியாளர் இரண்டாம் ராணுவ நிபுணர் பிரேம்ராஜ் ராய்ஸ்டன், ஆஸ்திரேலியாவில் தமது பயிற்சி குறித்துப் பேசினார்.
ஹெலிகாப்டர் பறக்கும் முன்னர், பறந்துகொண்டிருக்கும்போது, பயணத்திற்குப் பிறகு என எல்லா நேரங்களிலும் அது செயல்பாட்டுக்கு உகந்ததாக இருப்பதை உறுதிசெய்யும் பணியை அவர் மேற்கொள்கிறார்.
விமானமும் அவருக்குப் பிடித்த ஒன்று, பொறியியல் துறையும் பிடித்தமானது. இதனால் இந்தப் பணியில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இணைந்ததாகக் கூறினார் பிரேம்ராஜ். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் பணியமர்த்தப்பட்டுள்ள பிரேம்ராஜ், எக்சர்சைஸ் டிரைடண்ட் மூலம் விரிவான பயிற்சியை முப்படைகளுடனும் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையினருடனும் இணைந்து செய்வது பலன்தரும் என்றார்.
சகோதரர்களான ராணுவத்தில் தேசிய சேவையாற்றும் லிம் ஷி ரொங்கும் கடற்படையில் தேசிய சேவை புரியும் லிம் ஷி சியனும் இந்தப் பயிற்சியின் காரணமாக ஒரே கப்பலில் முதன்முறையாக இணைந்து சேவையாற்றுகின்றனர். வெவ்வேறு படைகளைச் சேர்ந்த இருவரும் வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது இன்பம் தந்தது என்று பகிர்ந்த அவர்கள், கைகோத்து ஒரே இடத்தில் அந்தப் பணியை ஆற்றுவோம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றனர்.