சிங்கப்பூரில் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கான முதல் மின்னூட்டு, மின்கலன் மாற்று நிலையங்கள் சோதனைத் திட்டத்துக்கு உட்படுத்தப்படுகின்றன.
அவற்றில் ஒன்று 239 அலெக்சாண்டிரா சாலையில் உள்ள நிலையம். இந்த நிலையத்தில் மின்சார மோட்டார் சைக்கிள்களின் மின்கலன்களை மாற்ற வெறும் ஆறு வினாடிகளே தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் அண்ட் கேரேஜ் நிறுவனத்திடமிருந்து விநியோகத் துறைக்காக குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள 20 மோட்டார் சைக்கிள்களின் ஓட்டுநர்களுக்கு இது நற்செய்தியாகும்.
ஃபுட்பாண்டா நிறுவனத்துடனான பங்காளித்துவ ஒப்பந்தத்தின்கீழ் இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
புதிய சுயசேவை நிலையத்தில் மின்சார மோட்டார் சைக்கிள்களை மின்னூட்டவும் மின்கலங்களை மாற்றவும் 30 இடங்கள் உள்ளன. 330 உபி சாலை 3லும் இன்னொரு மின்னூட்டு நிலையத்தை சைக்கிள் ஆண்ட் கேரேஜ் நிறுவனம் வைத்திருக்கிறது.
இவ்விரண்டு மின்னூட்டு, மின்கலன் மாற்று நிலையங்களையும் விநியோக மோட்டார் சைக்கிளோட்டிகள் பயன்படுத்தலாம். நிலையங்கள் 24 மணி நேரத்துக்கு இயங்கும்.
மின்னூட்டு, மின்கலன் மாற்று நிலையங்களில் 12 மாதங்கள் வரை சோதனைத் திட்டத்தை நடத்த தைவானிய நிறுவனமான கொகோரோவுக்கு நிலப் போக்குரவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சோதனைத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க அலெக்சாண்டிரா சாலையில் உள்ள நிலையத்தில் பழுதுபார்ப்பு, பராமரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பர்களுடன் பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிகளுக்கான சாதனங்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

