சிங்கப்பூர் மானியத்துடன் பசுமை சார்ந்த நெல் சாகுபடி முறை சோதனை

சிங்கப்பூர் மானியத்துடன் பசுமை சார்ந்த நெல் சாகுபடி முறை சோதனை

2 mins read
8ae1f146-9b86-4e55-a812-ab164f47b141
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேல்யூ நெட்வொர்க் வென்சூர்ஸ், சுற்றுச் சூழலுக்கு உகந்த சாகுபடி திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இது, 35,000 ஹெக்டர் பரப்பளவையும் 11,000 விவசாயிகளையும் உள்ளடக்கியது. - படம்: வேல்யூ நெட்வொர்க் வென்சூர்ஸ்

சிங்கப்பூர் அரசாங்கத்தின் புதிய மானிய உதவியுடன், சுற்றுச் சூழலுக்கு உகந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் வேல்யூ நெட்வொர்க் வென்சூர்ஸ் என்ற உலகளாவிய அமைப்பு, சிங்கப்பூரில் அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளது. அதோடு தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பசுமை சார்ந்த நெல் சாகுபடி முறையை அது சோதிக்கவிருக்கிறது.

புதிய சாகுபடி முறையில் நெல் வயல்கள் தொடர்ந்து தண்ணீரில் மூழ்க வைப்பதற்குப் பதிலாக உலர வைக்கப்படும். நெல் வயல்களை தொடர்ந்து மூழ்க வைப்பதால் மீத்தேன் வாயு அதிகமாக வெளியேறுகிறது. இது, கரிமத்தைவிட 80 மடங்கு புவியை வெப்பமாக்கும் சக்தியைக் கொண்டது.

இத்தகைய முறையிலான மீத்தேன் வாயு குறைப்பை கரிம ஊக்கப்புள்ளிகளாக வரவு வைத்துக் கொள்ளலாம். இந்த வரவுகளை, கரிம வரி செலுத்தும் நிறுவனங்களோ அல்லது சிங்கப்பூர் அரசாங்கமோ, தங்களுடைய கரிம வெளியேற்றத்தின் ஒரு பகுதியை ஈடுசெய்வதற்காக வாங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.

புதிய சாகுபடி முறையால் தண்ணீரை சேமிக்க முடியும் அல்லது அதிக தண்ணீர் தேவைப்படாது. இதனால் தண்ணீர் பற்றாக்குறையுள்ள மற்றும் வறட்சியான இடங்களில் உணவு உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.

மே 22ஆம் தேதி பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் கரிம திட்ட மேம்பாட்டுக்கான மானியத்தின் 2வது தொகுப்பை பெற்ற இரண்டு கரிமத் திட்ட மேம்பாட்டாளர்களில் வேல்யூ நெட்வொர்க் வென்சூர்சும் ஒன்று.

மற்றோர் அமைப்பு, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘ஏநீவ் கிளைமேட்’ என்ற அமைப்பாகும். அந்த அமைப்பு அண்மையில் சிங்கப்பூரில் புதிய அலுவலகத்தைத் தொடங்கியது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக பல கரிமத் திட்டங்களில் அது ஈடுபட்டு வருகிறது.

பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் மானியத்தின் மொத்த தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை. ஆரம்பக்கட்ட கரிம மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உயர்தர கரிம வரவு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பது இதன் நோக்கமாகும்.

குறிப்புச் சொற்கள்