தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகத்தான சேவையாற்றும் மருத்துவர்களுக்கு விருது

4 mins read
8c62fe0c-82c2-4edd-972f-0041a9d6d82a
சிறுநீரக மருத்துவத்துறை நிபுணர் மருத்துவர் வத்சலா. - படம்: சாவ் பாவ்

தமது 45 ஆண்டுகால பயணத்தில் நோயாளிகளின் வாழ்வில் நாள்களைச் சேர்ப்பதற்கும், நாள்களில் மகிழ்ச்சியை ஊட்டுவதற்கும் பங்களித்ததே விருதுக்குச் சமம் என மருத்துவர் வத்சலா ஆழமாக நம்புகிறார்.

சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களித்து, தலைமைத்துவப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு வழங்கப்படும் ‘முதுநிலை மருத்துவர்’ (Master Clinician) விருது பெற்ற இவர், “இது கரும்பு தின்னக் கூலி போன்றது,” என்று சிரிப்புடன் சொன்னார்.

கருமை நிற சூட் அணிந்த பெருங்கூட்டத்திற்கு மத்தியில் வென்ணிற பட்டுச் சேலை உடுத்தி, கம்பீரமாகச் சென்று விருது பெற்ற மருத்துவர் வத்சலா, 1980ஆம் ஆண்டு மருத்துவச் சேவையாற்றத் தொடங்கியதிலிருந்து எண்ணற்ற நோயாளிகளின் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து அவர்களது வாழ்வு நீடிக்க வழி செய்தவர்.

“ஒரு நோயாளியைக் காப்பாற்றுவது அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்வையே மாற்றுகிறது என்பதைப் பலமுறை உணர்ந்துள்ளேன். என் நோயாளிகள் வாழ்வின் அடுத்தடுத்த மைல்கற்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு என்னை அழைப்பார்கள். அவர்களது நீண்ட நல்வாழ்வைப் பார்க்கும்போது அதற்கு நானும் பங்களித்துள்ளேன் எனும் எண்ணம் தரும் மனநிறைவு அலாதியானது,” என்றார்.

சிறுநீரக மருத்துவத் துறை வல்லுநரான இவர், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவத் துறையில் மூத்த தலைமை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

இவர், “மருத்துவர்களுடன் இணை வல்லுநர்களுக்கும் விருதளித்துச் சிறப்பிப்பது பாராட்டுக்குரியது. அவர்கள் இல்லையெனில் எந்த மருத்துவரும் சிறப்பாகச் செயலாற்ற முடியாது. சொல்வதைச் செயலாக்குவதில் முக்கியப் பங்கு அவர்களுடையதுதான்,” என்று தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான இளம் சாதனையாளர் விருது பெற்ற மருத்துவர் ராஜ்குமார் மேனன்.
2025 ஆம் ஆண்டுக்கான இளம் சாதனையாளர் விருது பெற்ற மருத்துவர் ராஜ்குமார் மேனன். - படம்: சாவ் பாவ்

அன்பும், தைரியமும் நிறைந்த மருத்துவராகத் தமது வாழ்நாள் தாண்டியும் நினைவுக்கூரப்பட வேண்டும் என விரும்பும் மருத்துவர் ராஜ்குமார் மேனன், இவ்வாண்டுக்கான இளம் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.

விபத்துகளுக்குள்ளாகும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதுடன் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் அறுவை சிகிச்சை நிபுணரான இவர், “எங்கள் குடும்பத்தின் முதல் மருத்துவர் நான். என் மருத்துவப் பயணத்தின் தொடக்கத்தில் இக்கட்டான சூழலில் ஒரு நோயாளியைக் காப்பாற்ற முடிந்தது. அவரின் சிறுவயது மகள் தன் தந்தையைக் காப்பாற்றியதற்கு நன்றி எனக் கைப்பட எழுதிய வாழ்த்து அட்டையை எனக்குக் கொடுத்தார். அன்றே நான் சரியான துறையைத் தேர்ந்தெடுத்துள்ளேன் எனும் மகிழ்ச்சியும் இதில் நீண்ட நாள் நீடிக்க வேண்டும் எனும் உத்வேகமும் பிறந்தன,” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

“அவசர சிகிச்சைப் பிரிவு என்பதால் பதற்றம், மனஅழுத்தம், அழுகை, பயம், இறப்பு எனப் பலவற்றையும் பார்க்க வேண்டி வரும். சில நேரங்களில் இன்னும் சிறப்பாகச் செயலாற்றி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் எனும் எண்ணம் எழும். குடும்பம், சக ஊழியர்கள் அதிலிருந்து வெளிவர உறுதுணையாக இருப்பார்கள்,” என்றார்.

தொடர்ந்து, தொழில்நுட்பம் அவசர சிகிச்சைத் தரத்தை மேம்படுத்த உதவுவதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “மருத்துவத் துறையில் ஒவ்வொரு நொடியும் உயிர் போன்றது. உயிரைக் காப்பாற்ற நோயாளிகளின் நிலையை நேரடியாக அறிந்து, மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே சிகிச்சைக்குத் தயாராக இருக்கத் தொழில்நுட்பம் உதவுகிறது. அதற்கேற்ப எங்களைத் தயார் செய்துகொள்வதில் மகிழ்ச்சி,” என்றார்.

மற்றோர் அவசரச் சிகிச்சை மருத்துவரான மால்கம் மகாதேவன் மதிப்புக்குரிய மூத்த மருத்துவர் விருது பெற்றுள்ளார்.

“என் தந்தை ஒரு காவல்துறை ஊழியர். அவரது 35 ஆண்டு சேவையைப் பாராட்டி அவருக்கு அளிக்கப்பட்ட விருது எங்கள் வீட்டை இப்போதும் அலங்கரிக்கிறது. அது அவரது பெருமைக்குரிய அடையாளம். இன்று, எனது 34 ஆண்டு சேவையில் நான் விருது வாங்கும்போது அவரை நினைத்துக் கொள்கிறேன். சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்ற எங்கள் குடும்பத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும்பேறு,” என்றார் அவர்.

சுகாதாரத் துறை விருதுகள்

சுகாதாரப் பராமரிப்பு, ஆய்வு, கல்வி உள்ளிட்டவற்றில் சிறப்பாகப் பங்களித்ததற்காக 77 சுகாதாரத் துறை வல்லுநர்களுக்கும் நான்கு குழுக்களுக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

தேசிய பல்கலைக்கழகச் சுகாதாரக் குழுமத்தின், 2025ஆம் ஆண்டுக்கான பாராட்டு விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்றது.

துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சுகாதாரத் துறை வல்லுநர்களின் சேவை, அவற்களின் முக்கியத்துவம், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை பொதுச் சுகாதார மேம்பாடுகளுக்கு எடுத்து வரும் முயற்சிகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரத் துறையை வலுவாக வைத்திருக்க வல்லுநர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். சவால்களை எதிர்கொள்வதிலுள்ள அதே அர்ப்பணிப்பு, சவால்களை முன்னரே கண்டறிந்து காப்பதை நோக்கிச் செலுத்தப்பட வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

மூப்படையும் சமூகம் ஆரோக்கியமாக, நிறைவாக வாழ்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சொன்னார் அவர்.

கடந்த ஐந்தாண்டுகளாக இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள் மட்டுமின்றி, தாதிமை உள்ளிட்ட பிற வல்லுநர்களையும் சிறப்பிக்கும் விதமாக ‘எமெரிட்டஸ் ஃபெலோ’ (Emeritus Fellow) எனும் புதிய விருது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு வல்லுநர்கள் இவ்விருதினைப் பெற்றனர்.

மேலும், 52 பேர் உச்சநிலை விருதையும் 10 பேர் மரியாதைக்குரிய மூத்த மருத்துவர் விருதையும் 12 பேர் ‘எமெரிட்டஸ்’ ஆலோசகர்கள் விருதையும் நால்வர் ‘எமெரிட்டஸ் ஃபெலோ’ விருதையும் பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்