தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரைத் தற்காத்தோருக்கு நினைவஞ்சலி: பிரதமர் வோங்

2 mins read
be0d9f72-d654-47d4-b68c-a02e2c6429e6
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 80 ஆண்டுகள் கடந்திருப்பதை அனுசரிக்க சடங்குபூர்வ நிகழ்ச்சி கிராஞ்சி போர் நினைவிடத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது. - கோப்புப் படம்

இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூரைத் தற்காத்தோருக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பிய முன்னோடிகளுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அவர், “சுதந்திரம் பெற்று 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நாம், சிங்கப்பூரைத் தற்காத்த அனைவரையும், போரைச் சகித்துக்கொண்டு, இடிபாடுகளிலிருந்து நாட்டை மீண்டும் நிர்மாணித்த முன்னோடிகளையும் நினைவுகூர்ந்து சிறப்பிக்கிறோம்,” என்றார்.

இன்று நாம் அனுபவிக்கும் அமைதியும் செழிப்பும் அத்தகையோரின் தியாகத்தால் கிடைத்தது என்ற திரு வோங், அந்த நன்றிக்கடனை ஒருபோதும் முழுமையாகத் திரும்ப தரமுடியாது என்றார்.

“போரால் ஏற்பட்ட விளைவுகள் மறவாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நாட்டைத் தற்காத்தோரின் துணிச்சல், மீள்திறன், உறுதி ஆகிய பண்புகளைப் பின்பற்ற வேண்டும். ஒன்றுபட்ட மக்களாக சிங்கப்பூரையும் நமது வாழ்க்கையையும் நாம் தொடர்ந்து தற்காக்கவேண்டும்,” என்று திரு வோங் சுட்டினார்.

80 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் நகர மண்டபத்தில் ஜப்பானியர்கள் சரணடைந்ததை லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் ஏற்றுக்கொண்டதை அடுத்து சிங்கப்பூரில் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

“போருக்குப் பிந்திய தலைமுறைகளைச் சேர்ந்த நம்மில் பலர் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோர் வழி போர் குறித்த நினைவுகளைக் கேட்டிருப்போம்,” என்ற திரு வோங், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, அச்சம், வேதனை, அப்பாவி உயிர்கள் மாண்டது போன்றவற்றைப் பிரதிபலிக்கும் ஓர் இருண்ட அத்தியாயம் என்று வர்ணித்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 80 ஆண்டுகள் கடந்திருப்பதை அனுசரிக்க சடங்குபூர்வ நிகழ்ச்சி கிராஞ்சி போர் நினைவிடத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

அதில் மலாயாவையும் சிங்கப்பூரையும் தற்காக்க போராடியவர்களும் போரில் மாண்ட குடிமக்களும் கௌரவிக்கப்படுவர்.

போர் முடிந்த ஆண்டுகளைக் குறிக்க அனுசரிப்பு நிகழ்ச்சியின்போது ஐந்து முறை மணி அடிக்கப்படும்.

உள்ளூர் அமைப்புகளைச் சேர்ந்தோர், வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையங்களை வைப்பார்கள். அதற்குமுன் சென்பஸுரு என்ற ஜப்பானிய அமைப்பைச் சேர்ந்தோர் தாளால் செய்த ஆயிரம் நாரைகளை நினைவிடத்தில் வைப்பார்கள்.

குறிப்புச் சொற்கள்