மூன்று நாள்களுக்கு இசை, உணவு, விளையாட்டுகள் என விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வு ஒன்று, கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால் விற்பனையாளர்கள் பலர் நட்டாற்றில் விடப்பட்டனர்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் ஜூலை 12 முதல் 14 வரை நடைபெறுவதாக இருந்த ‘Trifecta Fest x Mangobossku’ என்ற அந்த நிகழ்வு திட்டமிட்டபடி இருக்கும் என்று ஜூலை 11ஆம் தேதி அதன் ஏற்பாட்டாளர் இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார்.
“நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் வதந்திகள் பொய். நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும்,” என்று பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், சமர்ப்பிக்கப்பட்ட அனுமதி ஆவணங்கள் தொடர்பான ஒப்புதலுக்காக இன்னும் காத்திருப்பதாக அதே நாளன்று ஏற்பாட்டாளரும் சிங்கப்பூர் எக்ஸ்போவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
சட்டபூர்வ ஒப்பந்தம் காரணத்தால் இது தொடர்பாக கூடுதல் விவரம் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
அதையடுத்து, நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஜூலை 13ஆம் தேதி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், நிகழ்வில் பங்கேற்கும் விற்பனையாளர்கள் ஜூலை 11 அன்றே நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றுவிட்டனர்.
நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும் என்றுதான் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, காவல்துறை வாகனங்களும் அதிகாரிகளும் அவ்விடத்தில் காணப்பட்டனர்.
தங்களுக்கு ஜூலை 12ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாக காவல்துறையினர் ஸ்டோம்ப் தளத்திடம் கூறினர்.
சம்பந்தப்பட்ட தரப்புகளை நேர்கண்டதில், 32 வயது பெண் ஒருவருக்கு எதிராகக் கைதாணை ஒன்று உள்ளதாகவும் அவர் பின்னர் கைதானதாகவும் அறியப்படுகிறது.
அந்தப் பெண்ணின் வழக்கு தொடர்பில் காவல்துறை விசாரணை நடந்துவருகிறது.

