வெளிநாட்டு ஊழியர்களின் சிங்பாஸ் கணக்கு மோசடி: மூவர் கைது

வெளிநாட்டு ஊழியர்களின் சிங்பாஸ் கணக்கு மோசடி: மூவர் கைது

2 mins read
697bd084-cbd4-48fb-90b1-aa4c6a2fd114
பாதிக்கப்பட்ட சிலரிடம், தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டுகளைச் சலுகைக் கட்டணத்தில் 500 வெள்ளிக்கு வாங்கவே அவர்களின் சிங்பாஸ் கணக்குகள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது. - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் சிங்பாஸ் கணக்குகளை ஏமாற்றிப் பெற்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் பெண்கள். ஒருவருக்கு வயது 29. மற்றவருக்கு வயது 38. எஞ்சிய ஆடவரின் வயது 25.

ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து, வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் குறைந்தது 23 ஊழியர்கள், தங்களின் சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிப்பதற்குக் கைம்மாறாக $80 ரொக்கம் தருவதாக அணுகப்பட்ட பிறகு, தங்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் காவல்துறையிடம் புகார் அளித்தனர். காவல்துறை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிலரிடம், தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டுகளைச் சலுகைக் கட்டணத்தில் 500 வெள்ளிக்கு வாங்கவே அவர்களின் சிங்பாஸ் கணக்குகள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த சதித்திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, எம்ஆர்டி நிலையங்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகள், கட்டுமானத் தளங்கள் போன்றவற்றில் தங்களைச் சந்திக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் வேலை அனுமதிச்சீட்டுகள் வருடப்பட்டு, அவர்களிடம் இருந்து சிங்பாஸ் கடவுச்சொற்கள் பெறப்பட்டன.

அவ்வாறு கைப்பற்றப்பட்ட கணக்குகள் தொலைத்தொடர்பு அல்லது நிதி சார்ந்த கணக்குகளைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

இந்த விவகாரத்தின் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியுடன் தொடர்புடைய மேலும் 136 வெளிநாட்டு ஊழியர்களின் கணக்குகள் கண்டறியப்பட்டன.

வேறொருவரின் சிங்பாஸ் சான்றுகளைப் பெற்ற குற்றத்திற்காக மூவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வேலை அனுமதிச்சீட்டுமோசடிசிங்பாஸ்வெளிநாட்டு ஊழியர்