தீவு விரைவுச்சாலையில் (பிஐஇ) புதன்கிழமை (மே 7) மாலை உச்சநேரத்தில் லாரி ஒன்று தீயில் சிக்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
துவாசை நோக்கிச் செல்லும் சாலையில் லாரி தீப்பிடித்து எரிவதாக இரவு 7.45 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) கூறியது.
எங் நியோ அவென்யூ வெளிவழியில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
லாரியில் பற்றிய தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும் அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.
விரைவுச்சாலையின் இடது தடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் முகப்புப் பகுதி தீப்பிடித்து எரிந்ததையும் கரும்புகை எழுந்ததையும் எஸ்ஜிஆர்வி ஃபேஸ்புக் குழு பதிவேற்றிய காணொளியில் காணமுடிந்தது.
லாரி நின்றிருந்த தடத்தை அடுத்த இருந்த மூன்று தடங்களும் மறைக்கப்பட்டு, வலது தடங்களில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றதையும் அந்தக் காணொளி காட்டியது.