தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியான் மாநாட்டில் டிரம்ப், சி ஜின்பிங் பங்கேற்பர்: அன்வார்

2 mins read
3ca30b36-240a-44b9-bdf5-5ebf12e784c3
ஆசியானுக்குள் இடம்பெறும் பொருளியல் உறவுகள் போன்ற முக்கிய விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: பெர்னாமா

சைபர்ஜயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உலகத் தலைவர்கள் நால்வர் பங்குபெறவிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

கூட்டத்திற்கு உலகத் தலைவர்கள் பலர் வருவார்கள் என்று அவர் சொன்னார். நீண்டகாலத்திற்குப் பலன்தரக்கூடிய முடிவுகள் எட்டப்படுவதை உச்சநிலை மாநாடு உறுதிசெய்யும் என்றார் திரு அன்வார்.

“ஆசியான் தலைவர்களையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் சி ஜின்பிங் உள்ளிட்ட கலந்துரையாடல் பங்காளித்துவ நாடுகளின் தலைவர்களையும் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா முதலியோரும் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன,” என்று திரு அன்வார் சொன்னார்.

ஆசியான் அமைப்புக்கு இம்முறை மலேசியா தலைமையேற்றுள்ளது. 58வது ஆசியான் நாள் கொண்டாட்டத்தின் தொடர்பில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மலேசியப் பிரதமர் சைபர்ஜயாவில் பேசினார்.

மாநாட்டில் பங்கேற்பதற்குத் தலைவர்களின் ஒப்புதலைப் பெறுவது முதல் படிதான் என்றார் அவர். மலேசியாவையும் ஆசியானையும்விட்டுச் செல்லும்போது மாநாட்டில் கலந்துகொண்ட நேரம் பலன்தரும் வகையில் இருந்தது என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுவதை உறுதிசெய்வதே மிகப் பெரிய சவால் என்று திரு அன்வார் கூறினார்.

ஆண்டுநிறைவுகள், மதிப்பீடு செய்வதற்கான தருணங்கள் என்று சொன்ன அவர், ஆசியான் அமைப்பு எவ்வளவு தூரம் வந்துள்ளது, செல்லவேண்டிய தொலைவு எவ்வளவு போன்றவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்றார்.

“நாடுகளுக்கு இடையில் அமைதி, நாடுகளுக்குள் அமைதி - இவையே நம் வட்டாரச் சமூகத்தின் அடித்தளங்கள். இவற்றை நாம் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வட்டாரப் பிரச்சினைகளுக்கு வட்டாரத் தீர்வுகளை எட்டவேண்டிய பொறுப்பையும் புறக்கணிக்க முடியாது,” என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.

அண்மையில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான பூசலை முடிவுக்குக் கொண்டுவருவதில் மலேசியா முக்கியப் பங்காற்றியது.

சண்டை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டதற்கு ஆசியான் தலைவர்கள் அனைவரின் ஆதரவும் ஒற்றுமையுமே காரணங்கள் என்றார் மலேசியப் பிரதமர்.

ஆசியான் அமைப்பு 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளும் சேர்ந்து அமைப்பை உருவாக்கின.

பின்னர் புருணை, வியட்னாம், லாவோஸ், மியன்மார், கம்போடியா ஆகியவை இணைந்துகொண்டன. 2022ஆம் ஆண்டு திமோர்-லெஸ்டே கொள்கையளவில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

குறிப்புச் சொற்கள்