அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் பகுதிமின்கடத்திகளுக்கான வரிகளை அறிவித்தார்.
இது சிங்கப்பூருக்கு மிகக் குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கூறியது.
குறிப்பிட்ட அதிநவீன சில்லுகள் உட்பட வேறு சில பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது அவற்றுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விதிக்கப்படும் அதிநவீன சில்லுகளில் நிவிடாவின் எச்200, ஏஎம்டியின் எம்ஐ325எக்ஸ் ஆகியவை அடங்கும். இவை பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் தரவு நிலையங்களில் பயன்படுத்தப்படுபவை. இந்தச் சில்லுகளைத் தைவான் தயாரிக்கிறது.
இறுதிச் செயலாக்கப் பணிகளுக்காக இச்சில்லுகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது அவற்றுக்கான வரிகள் வசூலிக்கப்படும். அதன் பிறகே அவை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
“வரி விதிப்பு குறித்து பகுதிமின்கடத்தியுடன் தொடர்புடைய துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் 14ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட முதற்கட்ட வரிகளால் சிங்கப்பூருக்கு அவ்வளவாகப் பாதிப்பு ஏற்படாது என்று ஆரம்பக்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட சில வகை பகுதிமின்கடத்திகளுக்கு மட்டுமே இந்த வரிகள் பொருந்தும். அத்தகைய பகுதிமின்கடத்திகள் சிங்கப்பூரில் தயாரிக்கப்படுவதில்லை,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அமைச்சு கூறியது.
அமெரிக்காவின் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிக்கு ஆதரவு வழங்கவும் அமெரிக்காவின் பகுதிமின்கடத்தி உற்பத்தித்துறையை மேம்படுத்தவும் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில்லுகளுக்கு வரிகள் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவு நிலையங்கள், ஆய்வு மற்றும் மேம்பாடு போன்றவற்றின் பயன்பாட்டுக்காக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பகுதிமின்கடத்திகளுக்கு வரிவிலக்கு வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கா அல்லாது மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் மற்ற சில்லுகளுக்கு வரி விதிப்பதை அதிபர் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். அவற்றில் சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் சில்லுகளும் அடங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

