நம்பிக்கையும் ஒற்றுமையும் சிங்கப்பூரின் போர்க்கவசம்: அமைச்சர் மசகோஸ்

நம்பிக்கையும் ஒற்றுமையும் சிங்கப்பூரின் போர்க்கவசம்: அமைச்சர் மசகோஸ்

2 mins read
தீவிரவாதப் போக்கை ஒரே சமூகமாக எதிர்த்தல்
0c5c306e-f0ae-4897-8ccb-3e0e2721b143
அமைதி, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றை வளர்க்க தெம்பனிஸ் வட்டாரத்தின் முயற்சிகளை வலுவாக்கும் நோக்கில் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

சிங்கப்பூரர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அதை மேலும் வலுவாக்கும்போது நாட்டை பிளவுபடுத்தும் தீவிரவாதச் சிந்தனையுடையோரின் முயற்சிகள் தோல்வியில் முடியும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக வெவ்வேறு சமூகங்களுக்கிடையே இருதரப்பு நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் வளர்க்க அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரர்கள் பகிர்ந்துகொள்ளும் இந்த நம்பிக்கையே நாட்டின் ‘போர்க்கவசம்’ என்றார்.

அக்டோபர் 27ஆம் தேதி முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தெம்பனிஸ் யுனைட் ஒன்றுகூடல் நிகழ்வில் பேசினார் திரு மசகோஸ்.

அதிகாரிகளால் முறியடிக்கப்பட்ட 17 வயது சிங்கப்பூரரின் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் குறித்த செய்தி அண்மையில் வெளியான நிலையில் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த சமூகத்தினருக்கு இது ஒரு ‘சிரமமான காலகட்டம்’ என்றார் அவர்.

தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் புளோக் 826, 828 இடையே அமைந்துள்ள திறந்தவெளி கூடுமிடத்தில் இந்த ஒன்றுகூடல் நடைபெற்றது.

அங்குதான் முஸ்லிம் அல்லாத ஆண்களைக் கொல்ல அந்த இளையர் திட்டமிட்டிருந்தார்.

தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், ‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதை அடுத்து, செப்டம்பரில் அவருக்கு ஈராண்டுகால தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அக்டோபர் 18ஆம் தேதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும் குடியிருப்பாளர்கள் சிலர் தங்களது பாதுகாப்பு குறித்து கவலைப்படலாம், அல்லது சமூகத்தில் உள்ளோர் மீது நம்பிக்கை வைப்பதில் சந்தேகம் எழுப்பலாம் என்றார் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு மசகோஸ்.

“இது உண்மையாகலாம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நமது போர்க்கவசத்திற்குள் இதை நாம் அனுமதிக்கக்கூடாது,” என்றார் அவர். இளையர் தொடர்பான சம்பவத்தை அடுத்து இந்த ஒன்றுகூடல் நிகழ்வை நடத்த முன்னெடுத்தவர் திரு மசகோஸ்.

“நமது பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதலை முறியடிப்பதில் வெற்றி கண்டாலும், இந்தத் தாக்குதல் செய்தியால் நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையை இழந்தால் தீவிரவாதிகள் வெற்றி காண்பதாகப் பொருள்படும். அந்த நம்பிக்கை சிறிதளவு குறைந்தாலும்கூட, மீண்டும் அதை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.

எல்லைகள் அறியாத தீவிரவாதப் போக்கை அனைவரும் ஒருமனதாகப் பொறுப்பேற்று முறியடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் அமைச்சர் மசகோஸ்.

குறிப்புச் சொற்கள்
தெம்பனிஸ்நம்பிக்கைதாக்குதல்தீவிரவாதம்