நம்பிக்கையே நீதித்துறையின் ‘துருவ நட்சத்திரம்’

நம்பிக்கையே நீதித்துறையின் ‘துருவ நட்சத்திரம்’

3 mins read
நீதித்துறையின் 200வது ஆண்டு (1826 -2026) - தலைமை நீதிபதியுடன் சிறப்பு நேர்காணல்
6f644ff6-1479-4a77-a26b-1ac319b0bcd5
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் நீதித்துறை தழைத்தோங்குவது பிரம்மாண்டமான கட்டடங்களிலோ சட்டப் புத்தகங்களிலோ அன்று; அது நீதிமன்றத்தின்மீது பொதுமக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையில் மட்டுமே என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியுள்ளார். அவ்வகையில் நம்பிக்கையே நீதித்துறையின் ‘துருவ நட்சத்திரம்’ என்றார் அவர்.

சிங்கப்பூர் நீதித்துறையின் 200வது ஆண்டை (1826 -2026) எட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (மே 22) செய்தியாளர்களைச் சந்தித்தார் தலைமை நீதிபதி. 

அந்த நேர்காணலின்போது, சிங்கப்பூர் நீதித்துறை கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பெற்ற உலகளாவிய வெற்றியின் பின்னணியில் வழிகாட்டியாகத் திகழ்ந்த கொள்கை எது என்று தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குத் தலைமை நீதிபதி மேனன் பதிலளித்தார்.

‘‘வளர்ந்த நாடுகள் பலவற்றில் அரசாங்க அமைப்புகள் மீதான நம்பிக்கை சரிந்துவரும் வேளையில், சிங்கப்பூர் மக்கள் இன்னும் அவற்றின்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த 200 ஆண்டுகாலப் பாரம்பரியத்தை மாசடையாமல் காப்பதே நீதித்துறையின் இலக்கு,’’ என்றார் அவர்.

1826ஆம் ஆண்டின் இரண்டாவது நீதி சாசனம் சிங்கப்பூரின் நவீனச் சட்ட அமைப்புக்கு வலுவான அடித்தளமிட்டது. அன்றிலிருந்து  இன்றைய காலகட்டம்வரை மிக முக்கியமாகப் பொருந்தக்கூடிய முதன்மைக் கோட்பாடு குறித்தும் பதில் தந்தார் தலைமை நீதிபதி.

1965ல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபோது, முதல் பிரதமர் லீ குவான் யூ ‘சட்டத்தின் ஆட்சி’, ஊழலற்ற நேர்மை ஆகியவற்றை நாட்டின் அடித்தளமாகக் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார் திரு மேனன்.

‘‘அதனைத் தொடர்ந்து, 1990களில் வழக்குகளைத் தேக்கமின்றி மின்னல் வேகத்தில் முடிக்கும் உலகத்தரம் வாய்ந்த சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நேர்மையும் வேகமுமே சிங்கப்பூர் நீதித்துறை உலக அரங்கில் முன்னணி வகிக்கக் கைகொடுத்த காரணங்கள்,’’ என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வரவால் நீதித்துறையில் ‘ஏஐ’ பயன்பாடு பெருகிவரும் வேளையில், அது மனிதத்தன்மைக்கு ஈடாகாது என்று தலைமை நீதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

தீர்ப்பு எழுதும் உரிமை ‘ஏஐ’க்கு கிடையாது

‘‘வழக்கறிஞரைப் போல ‘ஏஐ’ பாவனை செய்துகொண்டாலும் அந்தப் பயன்பாட்டுக் கருவிக்கு வரையறை உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்வது அவசியம்,’’ என்றார் திரு மேனன்.

மேலும் ‘ஏஐ’ வரம்புகளை உணர்ந்து நேர்த்தியான தற்காப்புக் கொள்கையை நீதிமன்றம் வகுத்துள்ளதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அதனை விவரித்தார்.

நீதித்துறையில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்குப் ‘போக்குவரத்து விளக்குகள்’ போல, பச்சை , மஞ்சள், சிவப்பு எனும் அணுகுமுறை கையாளப்படுகிறது. வழக்கின் ஆவணங்களின் சாராம்சத்தை உருவாக்குதல், மொழிபெயர்ப்புத் தரவுகளைச் சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு ‘ஏஐ’ முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. அது ‘பச்சை’ நிலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வாதங்களை உருவாக்குதல், புதிய சட்ட வரைவுகளை எழுதுதல் போன்ற பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் ‘ஏஐ’ பயன்படுத்தப்படுகிறது. அதை ‘மஞ்சள்’ நிறம் குறிக்கிறது.

அதேபோல ‘‘சிவப்பு’’ அணுகுமுறை என்பது தீர்ப்பு, வழக்கின் முடிவுகளைக் கணித்தல் போன்ற முக்கியப் பணிகளில் ‘ஏஐ’ பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் என்று திரு மேனன் சொன்னார்.

“நீதி வழங்குவது என்பது தரவுகளை மட்டும் சார்ந்திருப்பது அன்று; மாறாக அதில் உணர்வுகள், நெறிமுறைகள், சூழல்கள் முதலியனவும் அடங்கும். மனிதர்களின் உணர்வுகளையும் சூழ்நிலையையும் புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கும் ‘மனிதத்தன்மையை’ எந்த இயந்திரத்தாலும் வெளிப்படுத்த முடியாது என்பதில் நீதித்துறை உறுதியாக உள்ளது,’’ என்றார் அவர்.

சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் ‘உண்மை’க் கூற்றுகளை நிலைநிறுத்துவது சவாலாகியுள்ளது. அதனை எதிர்கொள்ளப் புதிய உத்தி கையாளப்படுவதாகவும் தலைமை நீதிபதி கூறினார்.

பொதுமக்கள் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட தீர்ப்புகளை வாசிக்கத் தயங்கலாம்; அவ்வகையில் அனைத்து முக்கியத் தீர்ப்புகளுடன் 3 முதல் 5 பக்க அளவில் வழக்கின் முக்கிய அம்சங்கள் அடங்கிய சாராம்சம் சம்பந்தப்பட்டோருக்கு உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் மக்களின் நலனுக்காக, எந்தச் சூழ்நிலையிலும் நடுநிலையோடு சரியாகச் செயல்படும் தேசிய அமைப்பாக நீதிமன்றத்தை மக்கள் நம்பவேண்டும். வரும் காலங்களிலும் அதுவே நீதித்துறையை வழிநடத்தும் விடிவெள்ளியாக இருக்கும் என்றார் தலைமை நீதிபதி மேனன்.

குறிப்புச் சொற்கள்