அடிக்கடி ஏற்பட்ட ரயில் சேவைத் தடைகளால் சிங்கப்பூரர்கள் வெறுப்படைந்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு அரசாங்கம் கடுமையாக பணியாற்றவேண்டும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்தார்.
அதிபர் உரை குறித்து நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) நடந்த விவாதத்தின்போது அமைச்சர் முரளி பேசினார். முன்பே கணித்துத் திட்டமிடுதலிலும் நம்பகத்தன்மைக்கும் பெயர்பெற்ற சிங்கப்பூர், அதன் போக்குவரத்துச் சேவையில் தடுமாறுவதால் மக்கள் வெறுப்பும் ஏமாற்றமும் அடைவது நியாயமானதே என்றார் அவர்.
ஜுலை மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடையே குறைந்தது 15 ரயில் சேவைத் தடைகள் எம்ஆர்டியின் ஒட்டுமொத்த வழித்தடங்களில் நடத்துள்ளன. அவற்றின் விளைவாக சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
“அரசாங்கம் இந்தத் தடைகளை குறைத்திட மூலதனத்தைச் செய்தாலும் முழுமையாக அவற்றை தடுத்துவிடமுடியாது. இதைச் சொல்ல நான் விரும்பாவிட்டாலும் அதுவே நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை,” என்று திரு முரளி நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
ரயில் சேவைத் தடைகள் ஏற்படும்போது, அது கூடிய விரைவில் வழக்க நிலைக்குத் திரும்புவதை அரசாங்கம் உறுதி செய்யும். பயணிகளிடம் தொடர்புகொண்டு மாற்று வழிகளைத் தேட உதவும்.
நம்பகத் தன்மையை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் $1பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது. ரயில் சேவை கண்காணிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுடன் அதுபோன்ற பணிகளில் சேவையாற்றுவோரின் திறனும் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் முரளி விவரித்தார்.
ரயில் சேவையின் உடனடி பிரச்சினைகளைக் கையாள ‘ரயில் சேவை நம்பகத்தன்மைக்கான பணிக்குழு’ ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் முரளி. அக்குழுவில் நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் தொழில்துறை நிபுணர்களும் இடம்பெறுவர் எனவும் அவர் தெரித்தார்.
புதிய ரயில் பாதை கட்டமைப்பில் ஹார்பர் ஃபிரன்ட் - மரினா பே இடையிலான மூன்று நிலையங்களை உள்ளடக்கிய 2026ஆம் ஆண்டில் திறக்கப்படவிருக்கும் வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்டம் ஒன்றாகும். மேலும் ஜூரோங் வட்டார ரயில் நிலையங்கள் 2027 முதல் 2029க்குள் கட்டிமுடிக்கப்படவுள்ளன. தீவின் குறுக்கு ரயில் பாதை திட்டம் 2030 முதல் தொடங்கவுள்ளது.ஜூரோங் வட்டார ரயில் திட்டத்தில் வெஸ்ட் கோஸ்ட் நீட்டிப்புத் திட்டமுடன் சிலேத்தார், தெங்கா ரயில் பாதைகளும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
உலகில் இணையத் தாக்குதல்கள் உள்நாட்டு போக்குவரத்தை குறிவைப்பதால் பாதுகாப்பை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.