டோவர், டெஃபு, நியூட்டன், பெடர்சன் ஆகிய வட்டாரங்களில் புதிய பேட்டைகள் அமைக்கப்படவிருக்கின்றன. அங்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் தனியார் வீடுகளும் கட்டப்படும்.
அதோடு பீஷானில் அலுவலகங்களுக்கான புதிய இடங்களும் வசதிகளும், சிங்கப்பூர் வடக்கிழக்குப் பகுதியில் கூடுதல் பூங்காக்களும் கட்டப்படவிருக்கின்றன.
செங்காங், உட்லண்ட்ஸ் நார்த், இயோ சூ காங் ஆகியவற்றில் தெம்பனிஸ் ஹப் போன்ற சமூக நடுவங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகர மறுசீரமைப்பு ஆணையம் ஜூன் 25ஆம் தேதி அறிமுகம் செய்த வரைவுப் பெருந்திட்டக் கண்காட்சியில் அந்தத் திட்டங்கள் இடம்பெற்றன. அந்தக் கண்காட்சி அடுத்த 10லிருந்து 15 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் உருவாக்கப்படவுள்ள மேம்பாட்டுத் திட்டங்களைக் காண்பிக்கின்றன.
புதிய வீடமைப்பு, பொழுதுபோக்கு வட்டாரங்களுக்கான திட்டங்களைத் தவிர சிங்கப்பூரின் நகர மையத்தைப் புதுபிப்பதோடு நெட்ஸ்டீல் ஸ்டீல் பவில்லியன் (NatSteel Steel Pavillion), முன்னாள் பாசிர் பாஞ்சாங் ஆங்கிலப் பள்ளி ஆகிய மரபுடைமைக் கட்டங்களையும் பாதுகாக்கும் பரிந்துரைகளைப் பெருந்திட்டம் கொண்டுள்ளது.
2023 அக்டோபரிலிருந்து பொதுமக்களிடமிருந்து விரிவாகத் திரட்டப்பட்ட கருத்துகளிலிருந்து கண்காட்சி அறிமுகம் செய்யப்பட்டது. நகர மறுசீரமைப்பு ஆணையம் கண்காட்சிகள், கலந்துரையாடல்கள், கருத்தாய்வுகள் ஆகியவற்றின் மூலம் ஏறக்குறைய 220,000 மக்களிடமிருந்து கருத்துகளைத் திரட்டியது.
இதுவரை நடத்தப்பட்ட கருத்துத் திரட்டு முயற்சியில் இதுவே ஆக விரிவானது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். இனிவரும் ஆண்டுகளுக்குச் சிங்கப்பூரர்கள் முன்வைத்த யோசனைகளைக் கண்காட்சி பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
கிராஞ்சி, டோவர், நியூட்டன் ஆகிய வட்டாரங்களில் வீடுகள் கட்டப்படும். 10க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தனியார், கழக வீடுகள் என 80,000 வீடுகள் அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அவை அடுத்த 10லிருந்து 15 ஆண்டுகளில் கட்டப்படும்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்வரும் டோவர் - மெட்வே குடியிருப்புப் பேட்டையில் புதிய வசதிகளும் பொழுதுபோக்கு இடங்களும் அமைக்கப்படும். முதல் கட்டத்தில் ஒன் நார்த், கென்ட் ரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள கிழக்குப் பகுதியில் கவனம் செலுத்தப்படும். அங்கு 6,000 தனியார், கழக வீடுகள் அமைக்கப்படும்.
காலனித்துவ பங்களாக்களைக் கொண்ட மெட்வே பார்க் வட்டாரத்தின் மேம்பாடுகள் இனிவரும் ஆண்டுகளில் ஆராயப்படும்.
புதிய சவால்களைக் கையாள நிலப் பயன்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து மறுஆய்வு செய்யப்படுவது அவசியம் என்று திரு சீ கூறினார். “சவால்களைக் கையாள அரசாங்க, பங்குதாரர்கள், அனைத்து சிங்கப்பூரர்கள் என அனைத்து தரப்பின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை,” என்றார் அவர்.

