துவாஸ் வெடிப்புச் சம்பவம்: அபராதத்துடன் அதிகாரி விடுவிப்பு

துவாஸ் வெடிப்புச் சம்பவம்: அபராதத்துடன் அதிகாரி விடுவிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Nov 2025 - 4:07 pm

1 mins read

துவாஸ் ஆலையில் நான்காண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரி ஒருவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

அந்தத் தகவலை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் (AGC) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது.

வழக்கின் உண்மை நிலவரங்களையும் சூழ்நிலைகளையும் கவனமாக ஆராய்ந்த பின்னர் கிறிஸ்டஃபர் லீ யூ பின், 52, (படம்) என்னும் வாரிய அதிகாரிக்கு $5,000 என்னும் அதிகபட்ச அபராதத் தொகையுடன் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக்கொள்ள அரசுத்தரப்பு சம்மதித்தது,” என அந்த அலுவலகம் சனிக்கிழமை (நவம்பர் 29) கூறியது.

தமக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) லீ செலுத்திவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான ஆணை கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) பிறப்பிக்கப்பட்டது என ஏஜிசி பேச்சாளர் கூறினார்.

நீதிமன்றத்துக்கு வெளியே அபராதத் தொகையுடன் வழக்கை முடித்துக்கொள்வதன் மூலம் அதில் சம்பந்தப்பட்டவர் மீது அதே வழக்கில் மீண்டும் குற்றம் சுமத்த முடியாது.

வாரியத்தின் கழிவு உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பிரிவின் இயக்குநரான லீ மீது வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருந்தது.

அபராதத் தொகையுடன் நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை முடித்துக்கொள்வது தொடர்பான முடிவை அரசுத்தரப்பே எடுக்க வேண்டும்.

கடந்த 2021ஆம் ஆண்டு துவாஸ் எரி ஆலையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் ஆடவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்