தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய மைல்கல்: 10 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்ட துவாஸ் துறைமுகம்

1 mins read
0dfb550e-37a4-4c33-9dbb-b6837a5a1ad4
நான்கு கட்டங்களாக மேம்படுத்தப்பட்டுவரும் துவாஸ் துறைமுகம், 2040களில் கட்டி முடிக்கப்படும்போது உலகின் ஆகப்பெரிய தானியக்கத் துறைமுகமாக விளங்கும். - படம்: பிஎஸ்ஏ சிங்கப்பூர்

துவாஸ் பெருந்துறைமுகம் 2022 செப்டம்பரில் செயல்படத் தொடங்கியதிலிருந்து, 10 மில்லியன் கப்பல் கொள்கலன்களைக் கையாண்டுள்ளதாக பிஎஸ்ஏ சிங்கப்பூர் நிறுவனம் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தெரிவித்தது.

சிங்கப்பூரின் விநியோகத் தொடர், தளவாடவியல் துறையில் துவாஸ் துறைமுகத்தின் உத்திபூர்வ முக்கியத்துவத்தை இந்தப் புதிய மைல்கல் கோடிட்டுக் காட்டுகிறது. இது, அத்துறைமுகத்தின் செயல்திறன், தொழில்நுட்ப, உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துக் காட்டுவதாகவும் பிஎஸ்ஏ கூறியது.

நான்கு கட்டங்களாக மேம்படுத்தப்பட்டுவரும் துவாஸ் துறைமுகம், 2040களில் கட்டி முடிக்கப்படும்போது உலகின் ஆகப்பெரிய, முற்றிலும் தானியக்கத் துறைமுகமாக விளங்கும்.

அதனிடம் தற்போது 11 கப்­பல் நிறுத்­துமிடங்­கள் செயல்பாட்டில் உள்ளன. 2027ல் முழுமையாகச் செயல்படும்போது, துவாஸ் துறைமுகத்தின் முதல் கட்டத்தில் 21 கப்­பல் நிறுத்­துமிடங்­கள் இருக்கும். அவற்றால் ஆண்டுதோறும் 20 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும். ஒட்டுமொத்தமாக, 2040களில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அத்துறைமுகத்திடம் 66 கப்­பல் நிறுத்து மிடங்­கள் இருக்கும்.

2022 செப்டம்பர் 1ல், மூன்று கப்­பல் நிறுத்­துமிடங்­களுடன் துவாஸ் துறைமுகம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

2027க்குள் தஞ்சோங் பகார், கெப்பல், பிரானி முனையங்களின் செயல்பாடுகள் துவாஸ் துறைமுகத்துக்கு இடம் மாறும். பாசிர் பாஞ்சாங் முனையத்தின் செயல்பாடுகள் 2040களுக்குள் துவாஸ் துறைமுகத்தில் ஒன்றிணைக்கப்படும் வரை, அம்முனையம் தொடர்ந்து இயங்கும்.

குறிப்புச் சொற்கள்