துவாஸ் சவுத் அவென்யூ 9ல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) ராஜ் மகேஷ்குமார் எனும் 29 வயது ஆடவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் 25 வயது இந்திய நாட்டவர் முருகானந்தன் கதிர்வேல்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜ் மகேஷ்குமாரை வெட்டுகத்தியால் கழுத்தில் வெட்டியதாக முருகானந்தன்மீது திங்கட்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.
சம்பவம், சனிக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்தது. அவ்விருவருக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து நீதிமன்ற ஆவணங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சம்பவ நாளன்று இரவு 10.10 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், பாதிக்கப்பட்ட ஆடவர் சாலையில் அசைவின்றிக் கிடந்ததைக் கண்டனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர், அந்த ஆடவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.
சிவப்பு நிற போலோ டி-சட்டை அணிந்திருந்த முருகானந்தன், காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். விசாரணைக்காக அவரை ஒரு வாரம் காவலில் வைக்க அரசுத்தரப்பு வழக்குரைஞர் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முருகானந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.


