சிங்கப்பூரின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், புதிய மின் உற்பத்திப் பொறி ஒன்றை உருவாக்கவும் சொந்தமாக வைத்திருக்கவும் இயக்கவும் துவாஸ் பவர் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது. 670 மெகாவாட் திறன் கொண்ட இந்த ஹைட்ரஜன் சுழற்சி எரிவாயுப் பொறி, 2031ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் செயல்படத் தொடங்கும்.
இந்தப் புதிய மின் உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு ஏறத்தாழ 1.2 மில்லியன் நான்கறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கக்கூடிய திறன் கொண்டது.
தற்போது சிங்கப்பூரின் மின் அமைப்பில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் 20க்கும் மேற்பட்ட சுழற்சி எரிவாயுப் பொறிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுடன் இணைந்து, துவாஸ் பவர் கட்டவுள்ள இந்த ஆலையையும் சேர்த்து 2031ஆம் ஆண்டுக்குள் ஐந்து ஹைட்ரஜன் சுழற்சி எரிவாயுப் பொறிகள் பயன்பாட்டுக்கு வரும் அல்லது மேம்பாட்டு நிலையை எட்டும் என்று எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூரின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தற்போதுள்ள வெப்ப மின் உற்பத்தி அலகுகளில் இந்தக் கூட்டுச் சுழற்சி எரிவாயுப் பொறிகளே மிகவும் திறன்படச் செயல்படக்கூடியவை ஆகும். இந்த அமைப்பில், இயற்கை எரிவாயுவும் காற்றும் எரிவாயு மின் நிலையத்தில் எரியூட்டப்படும்போது, அது சுழலி ஒன்றைச் சுழலச் செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதன் துணை விளைபொருளாக வெளிவரும் நீராவியானது, இரண்டாவது சுழலியைச் சுழல வைப்பதன் மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிங்கப்பூரின் மின்சாரத் தேவையை எதிர்கொள்ளும் வகையில், 2031ஆம் ஆண்டு மற்றும் 2032ஆம் ஆண்டுகளில் மூன்று புதிய ஹைட்ரஜன் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குமாறு எரிசக்தி நிறுவனங்களுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, எரிசக்தி சந்தை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வலுவான பொருளியல் வளர்ச்சி, போக்குவரத்துத் துறையின் மின்மயமாக்கல், பகுதிமின்கடத்தி உற்பத்தி மற்றும் தரவு மையங்கள் போன்ற தீவிர எரிசக்திப் பயன்பாட்டுத் துறைகளின் விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரின் மின்சாரத் தேவை அதிவேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டின் உச்சக்கட்ட மின்சாரத் தேவை ஆண்டுக்கு 2.4 விழுக்காடு முதல் 4.8 விழுக்காடு வரை அதிகரிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2031ஆம் ஆண்டுக்குள் உச்சக்கட்ட மின்சாரத் தேவை 9.6 ஜிகாவாட் முதல் 11.4 ஜிகாவாட் வரை உயரக்கூடும்.
நாட்டின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய முறையான திட்டமிடல் மிகவும் அவசியமானது என்று எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகி புவா கொக் கியோங் சுட்டிக்காட்டினார்.
துவாஸ் பவர் நிறுவனத்தின் இந்தப் புதிய சுழற்சி எரிவாயுப் பொறி, அதிக எரிசக்தி தேவைப்படும் துறைகளின் வளர்ச்சிக்குத் தேவையான திறனை வழங்கும் என்றும் தூய்மை எரிசக்திக்கான எதிர்காலத்தை நோக்கி சிங்கப்பூர் பயணிக்கும் வேளையில், இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்த அமைப்புகள் நம்பகமான அடிப்படை மின்சாரத்தை உறுதிசெய்யும் என்றும் அவர் கூறினார்.


