சிம்பா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உரிமையாளரான துவாஸ் நிறுவனம், மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனமான எம்1ல் பங்குகளை வாங்குவதற்கான உடன்பாட்டை ரத்து செய்திருப்பதாக வெள்ளிக்கிழமை (மே 22) தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ளது துவாஸ் நிறுவனம்.
எம்1ஐ வாங்குவதற்கான உடன்பாடு பற்றி சென்ற ஆண்டு (2025) ஆகஸ்ட் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. எம்1, சிங்கப்பூரின் கெப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
அதன்படி, நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்றாலோ மே 21ஆம் தேதிக்கு முன்னர் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றாலோ உடன்பாடு ரத்தாகிவிடும். நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எந்த ஓர் அபராதமும் இன்றி உடன்பாட்டை ரத்து செய்வதற்கான இறுதிக் காலக்கெடு அது.
சிங்கப்பூரின் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் விசாரணையில் சிம்பா தொடர்ந்து ஒத்துழைத்துவருவதாகக் கூறப்பட்டது. தொலைத்தொடர்புச் சட்டத்தையும் சிம்பாவின் நிலையங்கள் சார்ந்த செயல்முறை உரிமத்தின் நிபந்தனைகளையும் அது மீறியிருக்கக்கூடும் என்பதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஆஸ்திரேலியப் பத்திரப் பரிவர்த்தனைச் சந்தையில் துவாஸ் வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
விசாரணை குறித்த அண்மைத் தகவல்கள் பங்குதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று துவாஸ் குறிப்பிட்டது. இடைப்பட்ட காலத்தில், சிங்கப்பூர்த் தொலைத்தொடர்புச் சந்தையில் சிம்பா அதன் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடரும் என்று துவாஸ் தெரிவித்தது.

