துவாஸ் மேம்பாலம் விரிவுபடுத்தப்படும் என்றும் துவாஸ் சவுத் வட்டாரச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் அவை படிப்படியாக வாகனமோட்டிகளுக்குச் சேவை வழங்கத் தயாராகிவிடும்.
துவாஸ் ரோடு மேம்பாலத்தின் இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் நில ஆணையமும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தெரிவித்தன.
அதேவேளையில், துவாஸ் சவுத் அவென்யூ 3, துவாஸ் சவுத் புலவார்ட், பைனியர் ரோடு, துவாஸ் சவுத் அவென்யூ 5 ஆகிய பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என்று அவை கூறின.
துவாஸ் சவுத்தில் தொழில்துறை மேம்பாட்டுக்கும் அடுத்த பத்தாண்டுகளில் அதிகரிக்கவிருக்கும் துவாஸ் பெருந்துறைமுக நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தரும் வகையில் சாலைக் கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.
நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் துவாஸ் துறைமுகக் கட்டுமானப் பணிகள் 2040ஆம் ஆண்டு நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மாத நிலவரப்படி அங்கு ஒன்பது கொள்கலன் அணைகரைகள் செயல்பட்டு வருகின்றன.
மேம்பாட்டுப் பணிகள் அந்த வட்டாரத்தில் வாகனமோட்டிகளுக்கு மேம்பட்ட தொடர்புக்கும் குறைவான பயண நேரத்திற்கும் வகைசெய்யும் என்று ஆணையங்கள் கூறின.
விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு துவாஸ் மேம்பாலம், வடபகுதியில் உள்ள ஆயர் ராஜா விரைவுச்சாலையையும் தீவு விரைவுச்சாலையையும் தென்பகுதியில் உள்ள தொழிற்பேட்டைகளுடனும் துவாஸ் துறைமுகத்துடனும் இணைக்கும் என்பதை அவை சுட்டின.
தொடர்புடைய செய்திகள்
மேம்பாட்டுப் பணிகளுக்கான ஏலக்குத்தகைக்கு விண்ணப்பிக்கும்படி இந்த ஆண்டின் (2024) மூன்றாம் காலாண்டில் நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிக்கும்.
துவாஸ் ரோடு மேம்பாலத்தின் இரண்டாம் கட்டக் கட்டுமானம், அதனுடன் தொடர்புடைய சாலைப்பணிகளை முன்னிட்டு அரசாங்கம் 2,293 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தனியார் நிலத்தைக் கையகப்படுத்தும் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து ஆகஸ்ட் 2ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

