தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பள்ளிகளில் வேலை செய்த ஊழியரிடம் காசநோய் கண்டறியப்பட்டது

இரண்டு பாலர் பள்ளிகளில் காசநோய் பரிசோதனை

2 mins read
b796d4d1-040c-46fb-9539-579d066ee91a
காசநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பாலர் பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடத்தப்படவேண்டும். - படம்: கூகள் வரைபடம்

இரண்டு பாலர் பள்ளிகளில் வேலை செய்த ஒருவரிடம் காசநோய் கிருமி கண்டறியப்பட்டதை அடுத்து அந்த இரண்டு பள்ளிகளிலும் காசநோய் பரிசோதனை நடத்தப்படும் என்று தொற்றுநோய் நிலையம் தெரிவித்துள்ளது.

தோ பாயோவில் உள்ள மேப்பல்பேர் (MapleBear) பாலர் பள்ளி, மைண்ட்சேம்ப்ஸ் (MindChamps) பாலர் பள்ளியின் ஈஸ்ட் கோஸ்ட் கிளை ஆகியவற்றில் வேலை செய்த ஊழ்யரிடம் ஜூலை 15ஆம் தேதி காசநோய் கண்டறியப்பட்டது குறித்து தகவல் கிடைத்ததை நிலையம் குறிப்பிட்டது.

காசநோய் பரவலைத் துரிதமாகத் தடுத்து சிகிச்சை வழங்க நிலையம் ஊழியருடன் நேரடி தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் பணியில் இறங்கியது. எந்தெந்த தனிநபர்கள் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்க பாலர் பள்ளிகளுக்கு நிலையம் நேரடியாகவும் சென்றது.

குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஊழியருடன் நீண்டநேரம் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் பரிசோதிக்கப்பட்டனர் என்று நிலையம் குறிப்பிட்டது.

அவர்களில் பிள்ளைகளும் சக ஊழியர்களும் அடங்குவர். ஆகஸ்ட் 13ஆம் தேதி மைண்ட்சேம்ப்ஸ் பாலர் பள்ளியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தோ பாயோவில் உள்ள மேப்பல்பேர் பாலர் பள்ளியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பரிசோதனை நடத்தப்படும்.

மேப்பல்பேர் பாலர் பள்ளியில் மற்றொரு பரிசோதனை செப்டம்பர் நடுப்பகுதியில் நடத்தப்படும்.

பாலர் பள்ளிகளில் சுகாதார, தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காசநோயால் பாதிக்கப்பட்ட ஊழியர் நன்கு தேறி வருகிறார் என்றும் அவர் மூலம் தொற்று பரவும் அபாயம் இல்லை என்றும் தொற்றுநோய் நிலையம் சொன்னது. அந்த ஊழியர் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.

சிகிச்சை பெற்ற இரண்டு வாரங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டோரிடமிருந்து வழக்கமாக தொற்று பரவாது.

காசநோய் சிங்கப்பூரில் நிரந்தர நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

“காசநோய் குணப்படுத்தக்கூடியது. அதன் பரவலையும் தடுக்க முடியும்,” என்று தொற்றுநோய் நிலையம் விளக்கம் அளித்தது.

குறிப்புச் சொற்கள்