சிங்கப்பூரில் துணைப்பாட நிலைய உரிமையாளர் ஒருவர் அரசாங்கத் திட்டத்தின்கீழ் $126,749 மதிப்பிலான மானியங்களைப் பெற ஏழு போலியான பயிற்றுவிப்பாளர்களை உருவாக்கியதோடு, 63 பொய்யான கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தார்.
கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தின்போது மக்களின் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் அந்த அரசாங்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜெரார்ட் லிம் ஜியேன் ரோங்கிற்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீதான நான்கு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளையும் போலி கையொப்பமிட்டதற்கான ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பு வழங்கப்படுமுன் அவர்மீதான மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்த எஸ்ஜி ஒற்றுமை வேலைப் பயிற்சித் திட்டத்தை லிம் தவறாகப் பயன்படுத்தினார்.
பயிற்றுவிப்பாளர்கள் பெரும்பாலும் புதிய பட்டதாரிகளாக இருந்தனர் என்றும் லிம் நடத்திய ‘சக்செஸ்.நெட்’ துணைப்பாட நிலையம் அந்தத் திட்டத்தின்கீழ் இடம்பெற்றிருந்தது என்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அந்தத் திட்டத்தை நிர்வகித்துவந்த சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தை லிம் ஏமாற்றினார். அவர் நிலையத்தில் பணிபுரியாதோரின் விவரங்களைச் சமர்ப்பித்து, சம்மேளனத்திடமிருந்து மானியங்களைப் பெற்றார்.
அந்த நேரத்தில் லிம் துணைப்பாட நிலையத்தின் தலைமையாசிரியராக இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் சில இணையவாசல்களில் கற்பித்தல், பாடத்திட்ட நிர்வாகி பதவிக்காக விளம்பரம் வெளியிட்டார். வேலையில் ஆர்வமுள்ளவர்கள் அவரைத் தொடர்புகொண்டு, தங்களின் சுயவிவரங்கள், அடையாள அட்டை விவரங்கள், கல்வி எழுத்துப்படிவங்கள் ஆகியவற்றை மின்னஞ்சல்வழி அனுப்பிவைப்பர்.
இருப்பினும், அவர்களை வேலையில் எடுக்கத் திட்டம் இல்லாததால், லிம் அவர்களுக்குப் பதில் அளிக்கமாட்டார் என வழக்கறிஞர் கூறினார்.
அதற்குப் பதிலாக அவர்களின் விவரங்களை அரசாங்கத் திட்டத்திற்கான படிவத்தில் நிரப்புவதோடு, அவற்றைச் சம்மேளனத்திடமும் சமர்ப்பிப்பார்.
அவர் ஏழு பயிற்சி ஒப்பந்தங்களில் போலி கையெழுத்து போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும். இவ்வாண்டு மார்ச் மாதம் அவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி அவர் பெற்ற முழுத் தொகையையும் திரும்பக் கொடுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.