வட்ட ரயில் பாதையில் சுரங்கத்தை வலுப்படுத்தும் பணிகள் பாதியளவு முடிந்துள்ளன.
இப்பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதை நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 10) உறுதிசெய்ததாக சேனல்நியூஸ் ஏஷியா தகவல் தெரிவித்தது.
சுரங்கப் பணிகளால் ஜனவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை ரயில் சேவைகளில் இடையூறுகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மவுண்ட்பேட்டன், டக்கோட்டா, பாய லேபார் ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில்கள் ஒரே தண்டவாளப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
நிலப் போக்குவரத்து ஆணையம், ஹார்பர் ஃபிரன்ட் நிலையத்தை நோக்கி உள்வரும் சுரங்கப் பாதையில் அனைத்து 152 உள்வளையங்களிலும் எஃகுத் தகடுகளைப் பொருத்தும் பணியை முடித்துள்ளது. தற்போது இவற்றை அது சோதித்து வருகிறது.
இந்தச் சோதனையில் பயணிகளுக்கு சுரங்கப் பாதை வலுவாகவும் நம்பகமாகவும் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று ஆணையத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்குநர் சைஃபுல் ராஸ்னோ தெரிவித்தார்.
டோபிகாட் நிலையத்தை நோக்கி, உள்வரும் சுரங்கப் பாதையில் பணிகள் இம்மாதம் பிற்பகுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். இந்தக் கட்டத்தில் ரயில் சேவைகள் பாதிக்காது என்று திரு சைஃபுல் பயணிகளுக்கு உறுதியளித்தார்.
சுரங்கப் பணித் திட்டம் நிறைவடையும்போது, இரண்டு சுரங்கப்பாதைகளிலும் 300க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதை வளையங்கள் பலப்படுத்தப்பட்டிருக்கும்.
எஃகுத் தகடுகளைப் பொருத்த சிறப்பு ரோபோ கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஊழியர்கள் குறுகலான இடத்தில் மற்ற முக்கியப் பணிகளில் கவனம் செலுத்த முடிகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தொழில்நுட்பம் இல்லையென்றால் ஒவ்வொரு எஃகுத் தகடுகளையும் கையால் எடுத்துப் பொருத்த ஆறு ஊழியர்கள் தேவைப்படுவார்கள். இதற்கு அதிக மனிதவளமும் தேவைப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

