ஈசூனில் உயிருள்ள ஆமைகளைக் கொண்டுள்ள ‘லைவ் டர்ட்டல் அண்ட் டார்ட்டிஸ்’ அரும்பொருளகம் ஒன்று முன்பைவிட இன்னும் பெரிய அளவிலும் சிறப்பான முறையிலும் மீண்டும் திறக்கப்படவிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) 11 சென்சாரு கிளோசில் புதிய அரும்பொருளகம் திறக்கப்படும். இதற்குமுன் லோரோங் சென்சாருவில் இருந்த அரும்பொருளகம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கதவுகளை மூடியது.
புதிய வளாகம் கிட்டத்தட்ட 50 விழுக்காடு பெரியது. அங்கு 30க்கும் அதிகமான ரகங்களைச் சேர்ந்த 600க்கும் அதிகமான ஆமைகள் வைக்கப்பட்டிருக்கும்.
மேசைகள், நாற்காலிகள், ஓய்வெடுப்பதற்கான இடங்கள் போன்ற பல வசதிகளுடன் புதிய அரும்பொருளகம் கிட்டத்தட்ட $2 மில்லியன் செலவானதாக அரும்பொருளகத்தின் உரிமையாளர் கோனி டான் தெரிவித்தார்.
பெரும்பாலான தொகை அரும்பொருளகத்தின் அடிப்படை உள்கட்டமைப்பிற்குச் செலவிடப்பட்டது. அரும்பொருளகத்தின் கட்டுமானப் பணிகளுக்குக் கோனி தமது ஓய்வுகால சேமிப்பைப் பயன்படுத்தியதாக 8வர்ல்ட் குறிப்பிட்டது.
அரும்பொருளகத்துக்கான நுழைவுச்சீட்டுகளின் கட்டணங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் மூன்று பிரிவுகளின்கீழ் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன.
‘ஏ’ பிரிவு மூன்றிலிருந்து ஆறு வயதுக்குட்பட்டோருக்குரியது. ‘பி’ பிரிவு ஏழு வயதுக்கும் மேற்பட்டோருக்குரியது. ‘சி’ பிரிவு 60க்கும் அதிகமான வயதுடையோருக்குரியது.
அனைத்துப் பிரிவுகளிலும் கட்டணங்கள் $1 அதிகரித்துள்ளன.
‘பி’ பிரிவுக்கான நுழைவுச்சீட்டுக் கட்டணம் $11. ‘ஏ’, ‘சி’ பிரிவுகளுக்கான கட்டணம் $7.
அதிகரித்துவரும் செலவுகளையும் கட்டுமானச் செலவுகளையும் சமாளிக்க விலைகள் உயர்த்தப்பட்டதாகக் கோனி சொன்னார்.
“இது ஒரு சமூகத் திட்டம். இது அனைவருக்கும் மலிவானதாக இருக்கும் என்றும் அனைவரும் வந்து கற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.
இடமாற்றத்திற்கு முன்பு, அரும்பொருளகம் முந்தைய இடத்தில் ஆறு ஆண்டுகள் செயல்பட்டது. அப்போது, நிதிச் சிக்கல்களை அது எதிர்நோக்கியது. எனவே, கோனி சமூக ஊடகங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.


