தெம்பனிஸ் விரைவுச்சாலையில் புதன்கிழமை (நவம்பர் 5) காலை நிகழ்ந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் சிக்கிய ஐவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
முதல் விபத்து குறித்து காலை 7.10 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச் சாலையில் காலாங்-பாயலேபார் விரைவுச் சாலைக்குச் செல்லும் பாதைக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் ஒரு கார், ஒரு வேன், மூன்று மோட்டார்சைக்கிள் ஆகியவை ஒன்றின்மீது ஒன்று மோதிக்கொண்டன.
அதில் 28 வயது மோட்டார்சைக்கிளோட்டி, 21 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி, அவரது பின்னால் அமர்ந்து சென்ற 21 வயது நபர் ஆகியோர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காலை 8.45 மணியளவில் அதே தெம்பனிஸ் விரைவுச் சாலையில் மற்றொரு விபத்து நிகழ்ந்தது. ஒரு லாரியும் ஒரு மோட்டார்சைக்கிளும் இந்த விபத்தில் சிக்கின.
சாங்கி விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையில் சிலேத்தார் லிங்குக்கு வெளியேறும் பாதைக்கு முன்பு இந்த விபத்து நேர்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய 29 வயது ஆண் மோட்டார்சைக்கிளோட்டியும் அவரது பின்னால் அமர்ந்து சென்ற 32 வயதுப் பெண்ணும் சுயநினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
39 வயது லாரி ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.
இரு விபத்துகள் குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.

